கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர்ந்து நான்காவது நாளாக காட்டுத்தீ பரவி வருகிறது. சுமார் 300 ஏக்கர் பரப்பளவிலான பசுமை மரங்கள், மூலிகை செடிகள் தீயில் எரிந்து நாசமாகின.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பெருமாள்மலைப்பகுதியில் நான்காவது நாளாக கொளுந்து விட்டு எரியும் காட்டூத்தீ அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். மேலும் மேல்மலை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனை 300 ஏக்கர் பரப்பளவில் பரவிய காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் ஈடுப்பட்டுள்ளனர்.

பெருமாள்மலை வனப்பகுதிகளான தோகைவரை, மயிலாடும்பாறை, மச்சூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை இரவு திடீரென பற்றிய காட்டுத் தீ அதிக வேகத்துடன் பரவி வருகிறது. இதில் 500 ஏக்கர் பரப்பிலான அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள், புல்வெளிகள், உயிரினங்கள் தீக்கிரையாகியுள்ளன. வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து தீ தடுப்பு எல்லைகளை ஏற்படுத்தி தீயின அணைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

வழக்கமாக கோடைகாலத்துக்கு முன்னர் அமைக்கப்படும் தீ தடுப்பு எல்லைகளை இந்த ஆண்டு வனத்துறையினர் அமைக்கவில்லை என மலைகிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி என்பதால் தொடர்ந்து வீசும் சூறைக்காற்றால் தீயின் வேகம் மேலும் அதிகரித்து, பல்வேறு இடங்களுக்கு பரவி வருகிறது.

பகல் இரவு பாராமல் போராடி வரும் வனத்துறையினர், தீயை அணைக்க முடியாமல் தவித்து வருகின்றனர். தீயின் தாக்கம் அதிகரித்து, குருசரடி, ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் பரவியுள்ளது. தொடர்ந்து எரியும் காட்டுத்தீயினால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்து காணப்படுகிறது.காடுகளில் வாழ்ந்து வரும் ஏராளமான வனவிலங்குகள், பூச்சியினங்கள், பறவைகள், பசுமை மரங்கள் தீயில் கருகி செத்து மடிந்துள்ளன.

வனப்பகுதிகளில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கவும், காட்டுத் தீ பரவாமல் இருப்பதற்கும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்தாண்டு நிதி ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் வனப்பகுதியில் எரியும் பயங்கர காட்டுத்தீயை அணைக்க வனத்துறையினர் உயிரை பணயம் வைத்து தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனிடையே உயரமான மலைப் பகுதியில் தீயை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் உள்ளது போல ஹெலிகாப்டர் மூலம் ரசாயன பவுடர் துாவி கட்டுப்படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இங்கு வசிக்கும் கிராம மக்கள் வனப்பகுதிகள் தொடர்ச்சியாக தீப்பற்றி எரிகின்றன. இதனால் விலையுயர்ந்த மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமாகின. மேலும் வனவிலங்குகளும் பலியாகின்றன. இதுமட்டுமின்றி வனவிலங்குகள் காடுகளில் இருந்து குடியிருப்புக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வனத்துறையினர் காட்டுத்தீயை விரைவாக அணைத்து தீத்தடுப்பு முன்னெச்சரிக்கைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். தற்போது ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டி பரவிவரும் காட்டுத்தீயை வனத்துறையினர் கட்டுப்படுத்தாவிடில் அரியவகை மூலிகைச் செடிகள், மான் மற்றும் புலிகள், யானைகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது என்று தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க: கண்டப்படி பேசும் ஆளுநர் தேவையில்லை.. உடனே வேந்தர் பொறுப்பில் இருந்து தூக்குங்க..வெகுண்டு எழுந்த வைகோ..
