குப்பை கிடக்கில் மர்மநபர்கள் தீ வைத்து எரித்தால், அப்பகுதியில் உள்ள மக்களுக்கு சுவாச கோளாறு ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டனர். பெண் உள்பட 3 பேர், மயங்கி விழுந்தனர். இச்சம்பவம் கொடுங்கையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை கொடுங்கையூர் பகுதியில் குப்பை கொட்டும் வளாகம் உள்ளது. இங்கு தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, கொடுங்கையூர், வியாசர்பாடி, எருக்கஞ்சேரி, எம்கேபி நகர், பெரம்பூர், ஓட்டேரி, புரசைவாக்கம் உள்பட பல பகுதிகளில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள், லாரிகள் மூலம் கொண்டு வந்து, இந்த கிடங்கில் கொட்டப்படுகிறது.

இந்த குப்பை கிடங்கை சுற்றி ஆர்ஆா் நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், கண்ணதாசன் நகர், எழில்நகர், கொருக்குப்பேட்டை, நேரு நகர், படேல் நகர், நேதாஜி நகர் ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் 3000க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இங்கு இரவு நேரங்களில் குப்பைகளை பொறுக்கி, அதில் இருந்து இரும்பு, செம்பு, அலுமினியம், பொருட்களை எடுத்து, சிலர் கடையில் போட்டு பணம் சம்பாதிக்கின்றனர். இதற்காக குப்பைகளை தீ

வைத்து எரிக்கின்றனர்.

இதனால், இதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சுவாச கோளாறு, கண் எரிச்சல், வயிற்றுப்போக்கு உள்பட பல்வேறு நோய்கள் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு செல்வது வாடிக்கையாக உள்ளது.

இந்த குப்பை கிடங்கை, இந்த பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என மேற்கண்ட பகுதி மக்கள் பலமுறை பல்வேறு போராட்டம் நடத்தினர். அதேபோல், சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், நேற்று காலையில், இங்குள்ள குப்பைகளில் இருந்து இரும்பு, செம்பு ஆகியவை எடுப்பதற்காக மர்மநபர்கள் சிலர், தீ வைத்துள்ளனர். இதனால் ஏற்பட்ட கரும் புகையால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அனைவரும் கண் எரிச்சல், மூச்சு திணறலால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மேலும், கரும்புகையால் சுவாச கோளாறு ஏற்பட்டு எழில் நகரை சேர்ந்த சூரியகலா (41), ரமேஷ் (39), கார்த்திக் (25) ஆகியோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு திடீரென மயக்கமடைந்தனர். அவர்களை, உறவினர்கள் மீட்டு, கொருக்குப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். உடனடியாக சிகிச்சை அளித்ததால், அவர்கள் உயிர் பிழைத்ததாக பொதுமக்கள் கூறினர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறோம். ஆரம்ப காலத்தில் சிறிய இடத்தில் கொட்டப்பட்ட குப்பைகள், நாளடைவில், கிடங்காக மாறிவிட்டது. இதற்கு துவக்க காலத்திலேயே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால், அதை யாரும் கண்டு கொள்ளவில்லை.

இங்கிருந்து குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடமும், தமிழக அரசுக்கும் புகார் அளித்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. தேர்தல் நேரத்தில் இங்கு பிரசாரத்துக்கு வரும் வேட்பாளர்கள், குப்பை கிடங்கை உடனே அகற்றுவதாக கூறுகின்றனர். ஆனால், பதவிக்கு வந்த பின், அதை கண்டு கொள்வதில்லை. இதனால், தொடர்ந்து மம்நபர்கள், குப்பைகளி்ல் தீ வைப்பதால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம் என்றனர்.

கடந்த 2006 – 2011ம் ஆண்டு திமுக ஆட்சியில், கொடுங்கையூர் குப்பை கிடங்கில் சேரும் குப்பைகளை, செங்கல்படிவங்கள் தயாரிக்க முடிவு செய்தது. இதற்கான பணிகளுக்கு மாநகராட்சி சார்பில் திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன. ஆனால், 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் அந்த திட்டம் கைவிடப்பட்டது.