திருச்சி

 

திருச்சியில், சண்டை போட்டு கொண்ட மூன்று நண்பர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீஸ், காவல் நிலையம் சுற்றியும் மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றும்படி தண்டனை  வழங்கினார்கள்.

 

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே உள்ள மேலகுழுமணி பகுதியை சேர்ந்தவர்கள் பிரசாத் (24), மணிவேல் (29), தீனதயாளன் (19). நண்பர்களான இவர்கள் மூவருக்கும் இடையே நேற்று காலை திடீரென தகராறு ஏற்பட்டது.

 

பின்னர் இதுகுறித்து பிரசாத், மற்ற இரண்டு பேர் மீதும் ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஜீயபுரம் காவல் உதவி ஆய்வாளர் ராமராஜன், அவர்கள் மூவரிடமும் விசாரணை மேற்கொண்டார்.

 

அப்போது அவர்கள் சமாதானமாக செல்வதாக தெரிவித்ததையடுத்து பிரசாத் கொடுத்த புகாரை திரும்ப பெற்றுக்கொண்டார்.

 

இனைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் ராம ராஜன் மற்றும் காவலாளர்கள் அவர்களுக்கு அறிவுரை கூறி, தகராறில் ஈடுபடக் கூடாது என்று எச்சரித்தனர். மேலும் அவர்கள் தகராறில் ஈடுபட்டதற்கு தண்டனையாக, நண்பர்கள் மூன்று பேரும் ஜீயபுரம் காவல் நிலையத்தைச் சுற்றி 15 மரக்கன்றுகளை நடுமாறும் உத்தரவிட்டனர்.

 

அதன்படி நண்பர்கள் மூவரும் காவல் நிலையத்தை சுற்றி வேம்பு, புங்கன் போன்ற மரக்கன்றுளை நட்ட பின்னர் அந்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி விட்டு அங்கிருந்து சென்றனர்.