கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் பணம் வைத்து கோலி குண்டு விளையாட்டு விளையாடியதில் ஏற்பட்ட தகராறில் உடன் விளையாடியவரின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற இருவரை காவலாளர்கள் கைது செய்தனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓமலூரை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி கோட்டமேடு கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சின்னபையன். இவர் ஒரு இளநீர் வியாபாரி. இவருடைய மகன் கோபால் (31). இவர் கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. 

நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்து வெளியேச் சென்ற கோபால் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் மாலையில் தாராபுரம் சரபங்கா ஆற்றங்கரையில் உள்ள கொட்டகை பகுதியில் மர்ம நபர்களால் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் கோபால் சடலாமாக கிடந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்த ,தீவட்டிப்பட்டி காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று கோபாலின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து காவலாளர்கள் வழக்குப்பதிந்து கொலையாளிகள் யார்? என்று தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் கோட்ட மேடு பகுதியைச் சேர்ந்த காமராஜ் என்பவரின் மகன் பாலு என்ற பாலமுருகன் (23), நாராயணன் என்பவரின் மகன் ரமேஷ் (25) ஆகியோர் சேர்ந்து இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகத்தின் பேரில் காவலாளார்கள் அவர்கள் இருவரையும் நேற்று பிடித்தனர். 

பின்னர் அவர்கள் இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், "அவர்கள் இருவரும் சேர்ந்துதான் கோபாலை கொலை செய்தனர்" என்பதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் காவலாளர்கள் கைது செய்தனர்.

காவலாளர்களிடம் அவர்கள் இருவரும் அளித்த வாக்குமூலத்தில், "நாங்கள் இருவரும் நேற்று முன்தினம் குடித்துவிட்டு இருந்தோம். வீட்டுக்கு சென்றால் திட்டுவார்கள் என்பதால் நாங்கள் தாராபுரம் பகுதியில் உள்ள கொட்டகைக்கு சென்று படுத்திருந்தோம். அப்போது அங்கு கோபால் வந்தார். அவர் எங்களுடன் கோலி குண்டு விளையாடினார்.

விளையாட்டின்போது, கோலி குண்டை குறிபார்த்து அடித்தால் 10 ரூபாய் என்று பணம் வைத்து சூதாட்டமாக நடத்தினோம். அப்போது விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் அவரை நாங்கள் இருவரும் சேர்ந்து தாக்கினோம். இதனால் ஆத்திரமடைந்த கோபால் எங்களை சும்மா விடமாட்டேன், கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.

இதனையடுத்து அவரை உயிருடன் விட்டால் நமக்கு தான் ஆபத்து என்று கருதி, இருவரும் சேர்ந்து அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டோம்" என்று கூறியுள்ளனர்.