ஒரு பரோட்டா விலை ரூ.30 என கூறியதால், டிபன் கடையில் தகராறில் செய்து, அடிதடியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னையில் உள்ள ஒரு கட்சி சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அதில், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் தலைமை வகித்தார். இதையொட்டி பல்வேறு பகுகளில் இருந்து அவரது கட்சி தொண்டர்கள் பஸ், வேன் உள்படபல்வேறு வாகனங்களில் சென்னைக்கு வந்தனர். மாலையில் கூட்டம் முடிந்ததும், அனைவரும் சொந்த ஊர் புறப்பட்டனர்.

இதைதொடர்ந்து பாளையங்கோட்டை அருகே சிலந்திப்பேட்டையை சேர்ந்த ஒரு குழுவினரும், அந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். அனைவரும்,நேற்று இரவு பஸ்சில் புறப்பட்டனர்.  இரவு சுமார் 8 மணியளவில், குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில், காவல் நிலையம் எதிரே உள்ள டிபன் கடை முன் பஸ் நின்றது.

அப்போது பஸ்சில் இருந்து வந்த 16வயது சிறுவன், அந்த டிபன் கடையில் பரோட்டா விலையை கேட்டுள்ளான். அதற்கு ரூ.30 என கடைக்காரர் கூறியுள்ளார். இதையடுத்து சிறுவன், விலை அதிகமாக இருக்கிறது. வேறு கடையை பார்க்கிறேன் என கூறிவிட்டு, மீண்டும் பஸ்சுக்கு சென்றான்.

அங்கிருந்து ஒரு வாலிபருடன், வேறு கடையில் டிபன் வாங்க சென்றான். அப்போது, அந்த கடையை காண்பித்து, இந்த கடையில் 30 ரூபாய் என சொல்கிறார்கள். நம்ம ஏரியாவில், 5 ரூபாய்தான் என பேசினர். அதற்கு கடைக்காரர்கள், எங்கள் கடையில் அப்படித்தான் விற்போம். வேண்டுமானால் வாங்கி போங்க என சில வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த 2 பேரும், பஸ்சில் இருந்த சக நண்பர்களை அழைத்து வந்து, வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து எதிரே உள்ள காவல் நிலையத்தில் இருந்து போலீசார் வந்து, இருதரப்பையும் சமரசம் பேசினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. அதற்குள், பஸ்சில் வந்தவர்கள், டிபன் கடையை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதையடுத்து போலீசார் அடிதடியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 7 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், சிலந்திப்பேட்டையை சேர்ந்த 16 வயது சிறுவன், சிவகாசி (18), சதீஷ் (18), வீரராகவன் (18), பேரறிவாளன் (18), பாலசந்திரன் (18), முத்துக்குமார் (24) என தெரிந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 7 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் சிறுவனை செங்கல்பட்டு சீர்த்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். 6 பேரை சிறையில் அடைத்தனர்.