மர்ம காய்ச்சல் என கூறி மக்களை ஏமாற்ற கூடாது. நோய் பாதித்தவர்களுக்கு உரிய சிகிச்சைகளை விரைந்து அளித்திட வேண்டும் என தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை விடுத்துள்ளார். மேலும் அரசு நிர்வாகம் நோயாளியானதால், சுகாதார துறை அலட்சியப் போக்கில் உள்ளது என கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக டெங்கு உள்ளிட்ட விஷக் காய்ச்சல்களுக்கு சிறுவர் - சிறுமிகள் பலியாகும் கொடூரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த பரிதாபத்தின் தொடர்ச்சியாக டெங்கு காய்ச்சலுக்கு காஞ்சிபுரம் மாவட்டம் பம்மல் பகுதியை சேர்ந்த ஆஃபியா ஜாஸ்மின் என்ற 11 வயது சிறுமி எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் பலியானார்.

அதிமுக அரசு இத்தகைய உயிர்ப்பலிகளை மறைப்பதற்கான முயற்சிகளில்தான் கவனம் செலுத்துகிறதே தவிர, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையோ, நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளையோ செய்வதில்லை என்பதை பாதிக்கப்படும் குழந்தைகளின் பெற்றோரும் பொதுமக்களும் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.

டெங்கு போன்ற காய்ச்சல்கள் பரவும்போது அதுகுறித்த முன்னெச்சரிக்கை விடுக்க வேண்டிய தமிழக அரசின் சுகாதாரத்துறை, என்ன காய்ச்சல் என்பதைச் சொல்லாமல், 'மர்மக் காய்ச்சல்' என்று அறிவிப்பதே வழக்கமாக கொண்டுள்ளது. மர்மக் காய்ச்சலுக்கு என்ன சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன என்பதும் மர்மமாகவே இருப்பதால் குழந்தைகள் பலியாகும் சம்பவம் தொடர்ந்து கொண்டே செல்கிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் டெங்கு காய்ச்சலால் பல குழந்தைகள் பலியானார்கள். திருவண்ணாமலை மாவட்டம் தண்டரை கிராமத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்ட 5 சிறுவர்களில் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்கள்.

தமிழகத்தில் சாதாரண குடிமகன்கள் என்ன வகையான காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர் என்பதே மர்மமாகவே இருப்பது பெரும் வருத்தம் அளிக்கிறது. தமிழக அரசு நிர்வாகம் நோயாளி ஆனாதால், சுகாதாரத்துறை மோசமான நிலையில் இருக்கிறது.
நாட்டின் எதிர்கால சிற்பிகளான சிறுவர் - சிறுமிகள் அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் தொடர்ந்து பலியாவதற்கு ஆளும் அதிமுக அரசும், சுகாதாரத்துறையும் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

பம்மல் சிறுமி ஆஃபியா ஜாஸ்மினின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அந்த சிறுமியின் மரணமே, டெங்கு உள்ளிட்ட விஷக் காய்ச்சலுக்கான கடைசி உயிர்ப்பலியாக இருக்க வேண்டும் என்பதை இந்த அரசிடம் வலியுறுத்துகிறேன்.
இனியும் மர்மக் காய்ச்சல் என்று சொல்லி மக்களை ஏமாற்றாமல் சிறுவர் - சிறுமியரின் உயிர் காக்கும் சிகிச்சைகளை வேகமாகவும் வெளிப்படையாகவும் அளித்து, உயிர் பலிகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.