February 6 farmers are shelter in Chief Minister house

திருவாரூர்

கர்நாடகத்திடமிருந்து தண்ணீரைப் பெற நடவடிக்கை எடுக்கும் வகையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி பிப்ரவரி 6 -ஆம் தேதி தமிழக முதல்வர் வீட்டில் தஞ்சம் புகும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார்.

அப்போது அவர், "தமிழகத்தில் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழக அரசு போராட்டங்களை தூண்டும் விதமாக செயல்படுகிறது.

தேனி மாவட்டத்தில் நாளை (அதாவது இன்று) முல்லை பெரியாறுக்காக நடைபெறவிருந்த போராட்டத்திற்கு அனுமதி இரத்து செய்யப்பட்டுள்ளது. அனுமதி கொடுத்தால் உண்ணாவிரதப் போராட்டமாக நடைபெறும். இல்லாவிட்டால் கேரளம் - தேனி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் காவிரி நீரின்றி விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தமிழக அரசு விரைந்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி பிரதமரை சந்தித்து டெல்டா பகுதிகளைப் பாதுகாக்க காவிரி நீரை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

ஆனால், தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட மறுப்பதுடன், பிரதமரிடம் சென்று தண்ணீரை கேட்கவும் அச்சப்படுகிறது.

இந்த நிலையில், காவிரி டெல்டாவில் கருகும் பயிரை பார்த்து அதிர்ச்சி மரணங்கள் தொடங்கியுள்ளன. இது வேதனையளிக்கிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும். அதற்காக கர்நாடகத்திடமிருந்து தண்ணீரைக் கேட்க உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்ரவரி 6 -ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் வீட்டில் விவசாயிகள் தஞ்சம் புகுவது என முடிவெடுத்துள்ளோம்" என்று பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.