தன் இரண்டு குழந்தைகளுக்கு நீச்சல்  குளத்தில் நீச்சல் பயிற்சி அளித்தபோது, தந்தை மாரடைப்பால் நீரில் மூழ்கி மரணமடைந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை, மண்ணடி தம்புச் செட்டி தெருவில் வசித்தவர் சபியுல்லா (38). இவர், சொந்தமாக தொழில் நடத்தி வந்துள்ளார். இன்று காலை, தனது இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு நீச்சல் குளத்துக்கு சென்றுள்ளார். அங்கு தனது குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி அளித்தார். 

குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி அளித்துக் கொண்டே வந்த சபியுல்லா, திடீரென நெஞ்சைப் பிடித்தப்படியே தண்ணீருக்குள் மூழ்கியுள்ளார். நீச்சம் குளம் அருகே அங்கு வேறு யாரும் இல்லாத நிலையில், சபியுல்லா நீரில் மூழ்கியுள்ளார்.

சிறிது நேரத்துக்குப் பிறகு அங்கு வந்தவர்கள், சபியுல்லாவை மீட்டு முதலுதவி அளித்தனர். ஆனால், சபியுல்லா ஏற்கனவே உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீச்சல் குளத்தில் ஊழியர்கள் இல்லாத நிலையில், சபியுல்லா தன் இரண்டு குழந்தைகளுடன் நீச்சல் பயிற்சி அளித்துள்ளார். ஊழியர்கள் இல்லாதது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.