விழுப்புரம்

மகனின் காதணி விழாவுக்கு பத்திரிக்கைக் கொடுக்க சென்றபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் உடல் நசுங்கி தந்தை மற்றும் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தஞ்சாவூர மாவட்டம், அழகரசன் நகரைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் கிருஷ்ணமூர்த்தி (36). சிங்கப்பூரில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் தனது மகனுக்கு காதணி விழா நடத்த கடந்த சில நாள்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார் கிருஷ்ணமூர்த்தி.

காதணி விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து, உறவினர்களுக்கு பத்திரிக்கை கொடுக்கும் பணியில் மும்முரமாக கிருஷ்ணமூர்த்தி ஈடுபட்டு வந்தார். சென்னையில் உள்ள உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க வாடகை காரில் தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்டார்.

காரை தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் அரவிந்தன் (21) என்பவர் ஓட்டினார். நேற்று அதிகாலை இவர்கள் சென்ற கார், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மேல்பேட்டை என்ற இடத்தில் சென்றபோது, சாலையோரம் நின்ற லாரியின் பின்னால் எதிர்பாராதவிதமாக கார் பயங்கரமாக மோதியது. இதில் கிருஷ்ணமூர்த்தி, அரவிந்தன் ஆகிய இருவரும் இடிபாட்டில் சிக்கி உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்துகுறித்து காவலாளர்கள் விசாரணை நடத்தியதில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இருந்து சென்னைக்கு துணி பொடி ஏற்றிவந்த லாரி மேல்பேட்டை பகுதி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது, அந்த வழியாக பின்னால் வந்த கார் லாரி மீது மோதி விபத்துக்கு உள்ளானது என்பது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து லாரி ஓட்டுநரான கரூர் மாவட்டம் இராக்கிபட்டியைச் சேர்ந்த கருப்பண்ணன் மகன் பழனிசாமி (28) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.