Asianet News TamilAsianet News Tamil

தந்தை மற்றும் சகோதரனால் ஆணவக்கொலை செய்யப்பட்ட மகள்…

father and-brother-were-anavakkolai-daughter
Author
First Published Dec 31, 2016, 10:57 AM IST


தந்தை மற்றும் சகோதரரால் மகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் விரிவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாவட்டச் செயலர் எ.ரங்கசாமி தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச் செயலர் பி.சுகந்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைப் பொதுச்செயலர் யு.கே.சிவஞானம், மாதர் சங்க மாநிலச் செயலர் கே.ஜோதிலட்சுமி ஆகியோர் பேசினர்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே எ.வாழவந்தி பகுதியில் ஐஸ்வர்யா (17) என்ற மாணவி 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே தனது அத்தை மகனுடன் கட்டாய திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக குழந்தைகள் நல அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. இதனால் ஒத்திவைக்கப்பட்ட திருமணம் மீண்டும் அவரைக் கட்டாயப்படுத்தி நடத்தி வைக்கப்பட்டுள்ளது.

எனினும், 11-ஆம் வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவி விடுதியில் தங்கிப் பயின்று வந்தார். இந்நிலையில், விடுமுறையில் கணவனுடன் சேர்ந்து வாழ பெற்றோரால் நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளார். இதனால் மீண்டும் காப்பகத்தில் அடைக்கலம் கேட்டுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 17-ஆம் தேதி வாழவந்தியில் தனது தந்தை மற்றும் சகோதரரால் அடித்து கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

“ஐஸ்வர்யா ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற ஆணவக் கொலைகள் நாமக்கல் மாவட்டத்தில் அதிகரித்து வருகின்றன. எனவே, ஆணவக் கொலைகளைத் தடுத்திட மாவட்ட நிர்வாகம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மார்க்சீய கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.பெருமாள். எம்.அசோகன், ந.வேலுசாமி, எஸ்.கந்தசாமி, சி.துரைசாமி, கே.தங்கமணி, எஸ்.தனபால், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.செங்கோடன், ப.ராமசாமி, சு.சுரேஷ், எம்.கணேஷ்பாண்டியன் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட பொருளாளர் ஆர்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையை வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
வலியுறுத்தப்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios