Farmers stand on a single legged protest demanding various demands

நாகப்பட்டினம்

நாகப்பட்டினத்தில் கரும்புக்கான நிலுவை தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஒற்றைக் காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்படினம் மாவட்டம், மணல்மேடு அருகே தலைஞாயிறு கிராமத்தில் என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவுச் சர்க்கரை ஆலை உள்ளது. கடந்த சில வருடங்களாக நிர்வாகச் சீர்கேட்டின் காரணமாக சர்க்கரை ஆலை சரிவர இயங்கவில்லை.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கரும்புக்கான தொகையை ஆலை நிர்வாகத்தினர் வழங்கவில்லை.

இதுபோன்ற சூழ்நிலையால் இந்தாண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை முற்றிலும் இயக்கப்படாமல் முடங்கி கிடக்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த நிலையில் கரும்புக்கான நிலுவை தொகை வழங்காததை கண்டித்து கடந்த 6-ஆம் தேதியில் இருந்து கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் காசிநாதன் தலைமையில் விவசாயிகள், கூட்டுறவுச் சர்க்கரை ஆலை வளாகத்தில் காத்திருப்பு போராட்டம், கஞ்சி தொட்டி அமைத்து போராட்டம், வாயில் கருப்பு துணிக் கட்டி போராட்டம், எலியை வாயில் கவ்வி போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருபதாவது நாளான நேற்று இரவு இருபதுக்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் ஒற்றைக் காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, “காலம் தாழ்த்தாமல் கூட்டுறவு சர்க்கரை ஆலையை உடனே இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் 110 விதியின் கீழ் சர்க்கரை ஆலையின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை உடனடியாக வழங்க வேண்டும்,

கரும்புக்கான நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.