Farmers sit in struggle for release the water Erode Collector went
ஈரோடு
கீழ்பவானி வாய்க்காலில் உயிர்நீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஈரோடு ஆட்சியரகத்தில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய ஆட்சியர் கிளம்பிவிட்டார்.
ஈரோடு மாவட்டத்தில் வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்ற கூட்டரங்கில் நேற்று நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா முன்னிலை வகித்தார்.
காலை 11 மணி முதல் 11.30 மணி வரை விவசாயிகள் மனுக்கள் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து கீழ்பவானி விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் நல்லசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் துளசிமணி ஆகியோர் கூறியது:
"பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் ஒற்றைப்படை மதகுகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தண்ணீர் திறக்கப்படாததால் 1 இலட்சத்து 3500 ஏக்கர் விவசாய நிலங்கள் வரண்டுபோய் கிடக்கின்றன. மேலும், இந்தப் பகுதியில் குடிநீர் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது.
பவானிசாகர் அணை நீர் நிர்வாகத்தில் அரசு ஆணை, விதிமுறைகள், காவிரி இறுதி தீர்ப்பு எதுவும் பின்பற்றப்படவில்லை. விருப்பு, வெறுப்பு, ஆதாயம் அடிப்படையில்தான் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீர்நிர்வாகம் நடத்தப்பட்டுள்ளது.
மேட்டூர் வலது மற்றும் இடது கரை பாசனத்தில் 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த பாசன பகுதிக்கு கடந்த ஆண்டு உயிர்நீர் திறக்கப்பட்டது. மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்திலும் மேட்டூர் வலது மற்றும் இடது கரை பாசனத்துக்கு உயிர்நீர் திறக்கப்பட்டதுடன் 4 நாட்கள் நீட்டிப்பும் செய்யப்பட்டது.
அதன்பிறகு ஒருபோக பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், கீழ்பவானி வாய்க்காலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உயிர்நீர் கூட திறக்கப்படவில்லை. கடந்த 30.1.2018 அன்று நீலகிரி மின் அணைகளில் இருந்து 6.9 டி.எம்.சி. தண்ணீரை பவானிசாகர் அணைக்கு கொண்டுவந்து கீழ்பவானி பாசனத்துக்கு திறக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், அதற்கும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது பவானிசாகர் அணையில் 5.8 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. மேலும் மின் அணைகளில் இருந்து 5 டி.எம்.சி. தண்ணீர் எடுக்கலாம். இதன் காரணமாக கீழ்பவானி வாய்க்காலில் தொடர்ந்து 30 நாட்கள் தண்ணீர் வழங்க முடியும். ஆனால், 10 நாட்கள் மட்டுமே தண்ணீர் விடுவதாக தெரிவிக்கிறார்கள்.
இதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எங்களுக்கு தொடர்ந்து 30 நாட்கள் கண்டிப்பாக உயிர்நீர் வழங்க வேண்டும். அப்படி வழங்கினால்தான் எங்கள் பகுதியில் உள்ள 15 ஆயிரம் ஏக்கர் தென்னைகளை காப்பாற்ற முடியும். மேலும் எங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினையும் ஓரளவு தீரும். இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர்கள் கூறினர்.
அதற்கு ஆட்சியர் எஸ்.பிரபாகர், ‘உங்களுடைய கோரிக்கை அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டு உள்ளது. மிக விரைவில் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
ஆனால், அதைத் தொடர்ந்தும் அனைத்து விவசாயிகளும் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பியதால் ஆட்சியர் பிரபாகர் நேற்று மதியம் 1¼ மணிக்கு கூட்டம் நிறைவடைந்ததாக கூறி நன்றி தெரிவித்துவிட்டு கூட்ட அரங்கை விட்டு புறப்பட்டார். ஆனால் கீழ்பவானி விவசாயிகள் 200-க்கும் மேற்பட்டோர் கூட்ட அரங்கை விட்டு வெளியேறாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு சூரம்பட்டி காவல் ஆய்வாளர் ராஜாகுமார் அங்கு விரைந்து வந்து, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கூட்ட அரங்கைவிட்டு வெளியேறும்படி கூறினார். மேலும், விவசாயிகளும் தங்களுக்குள் கலந்தாலோசித்து பிற்பகல் 3.30 மணி அளவில் தங்களுடைய உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.
