மூழ்கிய விளைப் பயிர்களை கண்டு வாடும் விவசாயிகள்; இழப்பீடு கேட்டு கண்ணீர் மல்க கதறல்...
கரூரில் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சோளம், மரவள்ளிக்கிழங்கு, வாழை, நாவல்பழம் போன்ற பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கரூரில் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சோளம், மரவள்ளிக்கிழங்கு, வாழை, நாவல்பழம் போன்ற பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தங்களுக்கு ரூ.5 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கர்நாடகாவில் பொழிந்துவரும் கனமழையால் கே.ஆர்.எஸ், கபினி அணைகள் நிரம்பின. இதனால் அவ்வணைகளில் இருந்து உபரி நீராக தமிழகத்திற்கு 1.91 இலட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மற்றொரு பக்கம் மேட்டூர் அணையில் இருந்து 1.94 இலட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
அதுமட்டுமா? பவானி, அமராவதி ஆறுகளில் இருந்தும் உபரி நீர் திறந்துவிடப்படுகிறது. இந்த நீர் மேட்டூர் நீரோடு இணைந்து இரண்டரை இலட்சம் கன அடியை சர்வ சாதாரணமாக தொட்டு விடுகிறது. இந்த இரண்டரை இலட்சம் கன அடி தண்ணீரும் மாயனூர் கதவணைக்கு தான் வருகிறது. இங்கு வரும் தண்ணீர் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் காவிரி கரையோரப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், மாயனூர், மேலமாயனூர், கட்டளை போன்ற பகுதிகளில் விவசாய விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து பயிர்கள் பெருத்த சேதத்தை சந்தித்துள்ளன. விளை நிலங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் பரிசலில் சென்று பயிர்களை மீட்கின்றனர் விவசாயிகள்.
வாழை, மரவள்ளிக் கிழங்கு, சோளம், நாவல்பழம் போன்றவை முற்றிலும் தண்ணீரில் மூழ்கிவிட்டன. இவற்றில் எஞ்சியிருப்பதை மீட்டு விற்பனைக்கு அனுப்பினால் கூட இவற்றிற்கு செலவு செய்த தொகையில் பாதியை கூட எடுக்க முடியாது என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் குறைந்தது ரூ.5 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் விவசாயிகள். இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.