Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் போராட்டத்தில் குதித்த அய்யாக்கண்ணு - டெல்லியில் விவசாயிகள் கைது!!

farmers protest in delhi
farmers protest in delhi
Author
First Published Jul 16, 2017, 11:33 AM IST


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடந்தது.

மண் சோறு சாப்பிடுவது, அரை நிர்வானம், நிர்வான ஓட்டம் உள்பட 41 நாட்கள், ஒவ்வொரு போராட்டத்தை நடத்திய விவசாயிகள், பிரதமரை நேரில் சந்திக்க வேண்டும் வலியுறுத்தினார். ஆனால், கடைசி வரை, அவர்களால் பார்க்க முடியவில்லை.

முடிவில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரில் சென்று விரைவில் தீர்வு ஏற்படும் என்று உறுதியளித்தனர். அதன்பின்னர், விவசாயிகள், தங்களது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி கொண்டனர்.

ஆனால், அதன்பின்னர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன், சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை விவாதம் நடந்தபோது, சென்னை சேப்பாக்ககத்தில் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்.

அப்போது மீண்டும் பேச்சு வார்த்தை நடத்திய அமைச்சர்கள், விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். அப்போது மத்திய அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்திருந்தனர். மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையொட்டி, இதற்காக கடந்த 14-ந்தேதி காலை திருச்சி ஜங்சனில் இருந்து சுமார் 100 விவசாயிகள் ரயில் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு இன்று காலை சேர்ந்தனர். அவர்கள் பிரதமர் இல்லம் அருகே சாலையில் திடீரென அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

முன்னதாக அவர்கள் டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் இருந்து போராட்டம் நடந்த பிரதமர் அலுவலக சாலை வரை கோவணத்துடன் ஊர்வலமாக சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் டெல்லி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பிரதமரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி கோ‌ஷமிட்டனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு 2 பஸ்கள் வர வழைக்கப்பட்டு, அதில் விவசாயிகள் அனைவரையும் ஏற்ற முயன்றனர். காலையில் இருந்து உணவு எதுவும் சாப்பிடாததால் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதான பொள்ளாச்சியை சேர்ந்த பால சுப்பிரமணியன், ஈரோட்டை சேர்ந்த ஜெயராமன் ஆகியோர் மயக்கம் அடைந்தனர்.

ஆனால் அவர்களுக்கு எந்த வித முதலுதவி சிகிச்சையும் அளிக்க டெல்லி போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் நடை பெற்ற போராட்டத்தின் போது விவசாயிகள் பாராளுமன்றம் முன்பு நிர்வாண கோலத்தில் ஓடியதன் காரணமாக போலீசார் அனைவரும் உஷார் நிலையில் இருந்து பாதுகாப்பில் ஈடுபட்டனர். மேலும் நாடாளுமன்ற பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 எங்கள் கோரிக்கையை தமிழக அரசும், மத்திய அரசும் நிறைவேற்றாமல் உள்ளனர். இதனால் மீண்டும் டெல்லியில் போராட்டத்தை தொடங்கியுள்ளோம். எங்கள் போராட்டத்தில் மற்ற மாநில விவசாயிகளும் பங்கேற்றுள்ளனர். கோரிக்கை நிறைவேறும் வரை தமிழகம் திரும்பமாட்டோம் என்றார் அய்யாக்கண்ணு. 

Follow Us:
Download App:
  • android
  • ios