farmers demanding to open water for Drinking and forming purposes

கன்னியாகுமரி

குடிநீர் மற்றும் விவசாய தேவைக்காக தோவாளை வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட வேண்டி கையில் கருகிய நாற்றுகளுடன் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்திற்கு விவசாயிகள் திரண்டு வந்து மன்றாடினர்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள லூயி பிரெயிலி கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நேற்று நடைப்பெற்றது.

இந்த முகாமிற்கு ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் தலைமை தாங்கி மக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டார். அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்களது குறைகள், கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.

அந்த மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர் அது தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவுப் பிறப்பித்தார்.

இந்த முகாமில் தோவாளை ஒன்றிய திமுக செயலாளர் நெடுஞ்செழியன், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் அருணாசலம் ஆகியோர் தலைமையில் திமுக மாவட்டப் பொருளாளர் கேட்சன், நகரச் செயலாளர் வழக்கறிஞர் மகேஷ், முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பூதலிங்கம்பிள்ளை, தேமுதிக ஒன்றியச் செயலாளர் கண்ணன், பா.ஜனதா ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றியச் செயலாளர் ஜாண், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியச் செயலாளர் சக்திவேல் மற்றும் தோவாளை ஒன்றியப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் திரளாக கையில் கருகிய நாற்றுக்களை கொண்டு வந்து மனு அளித்தனர்.

அதில், “தோவாளை வாய்க்காலில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். தண்ணீர் திறந்தவுடன் மழை வரும். ஆனால், இந்த ஆண்டு இன்னும் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.

தற்போது தோவாளை ஒன்றியத்தில் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தோவாளை கால்வாய் தண்ணீரை நம்பி வாழும் மக்கள் நிலத்தடி நீர் குறைந்ததின் காரணமாக ஆழ்குழாய் கிணற்று தண்ணீர்கூட கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். உள்ளாட்சித்துறை மூலமும் குடிநீர் கிடைக்கவில்லை. மக்கள் தண்ணீருக்காக பெரிதும் சிரமப்படுகின்றனர்.

வாய்க்காலில் தண்ணீர் வரும் என்ற நம்பிக்கையில் நாற்று பாவிய பயிரும் கருகக்கூடிய நிலையில் உள்ளது. ஜி.எஸ்.டி. வரி மூலம் விவசாயிகளுக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. எனவே தமிழக அரசு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ஆவண செய்ய வேண்டும்.

மேலும், மக்களின் குடிநீர் தேவைக்காகவும், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் நலன் கருதியும் தோவாளை வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறியிருந்தனர்.