Asianet News TamilAsianet News Tamil

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை வழக்கம்போல வருவாய்த் துறையே நடத்த வேண்டும் – விவசாயிகள்…

Farmers care meeting need to hold by revenue department as usual - farmers
Farmers care meeting need to hold by revenue department as usual - farmers
Author
First Published Jun 7, 2017, 8:54 AM IST


திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை வேளாண்துறை நடத்துவதற்குப் பதிலாக வழக்கம்போல வருவாய்த் துறையே நடத்த வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாதந்தோறும் மூன்றாம் வெள்ளிக்கிழமை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், முதல் செவ்வாய்க்கிழமை வட்ட அளவிலான குறைதீர் கூட்டம் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெறும்.

இப்படியிருக்க செவ்வாய்க்கிழமைகளில் நடக்கும் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் இனிமேல் வேளாண்துறை சார்பில், அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகங்களில் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமையான நேற்று ஏராளமான விவசாயிகள் வழக்கம்போல திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். காலை 11 மணிக்குப் பிறகும் குறைதீர் கூட்டம் தொடங்கப்படவில்லை.

பின்னர், வேளாண் உதவி இயக்குநர் சி.அரக்குமார் தலைமையில் திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடக்கிறது என்று விவசாயிகளுக்கு தெரியவந்தது.

இந்த திடீர் மாற்றத்தால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை வழக்கம்போல வருவாய்த் துறை மூலமே நடத்த வேண்டும் என்றும், வேளாண் துறை மூலம் நடத்தக்கூடாது என்றும் முழக்கங்களை எழுப்பி அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

அப்போது, ஆட்சியரின் உத்தரவின்பேரில்தான் வேளாண் துறை மூலம் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படுவதாக வட்டாட்சியர் ரவி தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த விவசாயிகள், குறைதீர் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர், கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலர் நார்த்தாம்பூண்டி ஜெ.சிவா தலைமையில், விவசாயிகள் கருப்புப் பட்டை அணிந்து தர்னாவில் ஈடுபட்டனர்.

மேலும், ஜமாபந்தி நிறைவு விழாவில் விவசாயிகள் பேச அனுமதி வழங்காத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும், வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை மீண்டும் வருவாய்த் துறையே நடத்தக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர், விவசாயிகள் அனைவரும் கூட்டத்தைப் புறக்கணித்து அவரவர் வீடுகளுக்குச் சென்றனர்.

கூட்டத்திற்கு வந்திருந்த ஒன்றிரண்டு விவசாயிகளை வைத்து தொடர்ந்து அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி முடித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios