டெல்லியில் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகளில் 3 பேர் திடீரென மரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வறட்சி நிவாரணம், பயிர்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

இதற்கிடையே போராட்டக் களத்தில் இருந்த விவசாயிகளில் 3 பேர் திடீரென அங்கிருந்த மரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் ஜந்தர்மந்தர் மைதானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அறிந்த நடிகர் விஷால் தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.  சக விவசாயிகளும் மரத்தின் கீழே இறங்கி வருமாறு கோரிக்கை விடுத்தனர். 20 நிமிடங்களுக்குப் பின்னர்  மரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த 3 பேரும் கீழே இறங்கினர். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள், பயிர்கடன் தள்ளுபடி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தங்களை அமைச்சர்கள் சந்திக்கிறார்களே தவிர நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று வேதனை தெரிவித்தனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.