இந்தாண்டு தமிழகத்தில் பருவமழை பொய்த்துவிட்டது. இதனால், பயிர்கள் கருகி, விவசாய தொழில் முற்றிலுமாக நாசமாகிவிட்டது. இதனால், வேதனை அடைந்த விவசாயிகள் ஏராளமானோர் மாரடைப்பு, தற்கொலை என இறந்துள்ளனர்.

இதனால், தமிழகத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர் பாலகணேசன் என்பவர், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், தமிழகத்தில் உள்ள விவசாயத்தை கண்காணிக்க நிபுணர் குழு அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.30 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும். நவீன தொழில்நுட்பம் மூலம் விவசாயத்தை காக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பொதுநல மனுதாரரின் கேள்விக்கு, மத்திய மற்றும் மாநில அரசு வரும் பிப்ரவரி 14ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், ஒரு அரசை தேர்ந்தெடுக்கும் நீங்கள், ஏன் அந்த அரசையே அணுகக் கூடாது என மனுதாரரிடம் கேள்வி எழுப்பினார்.