திருவொற்றியூர் பள்ளி ஒன்றின் வகுப்பறையில் ஃபேன் கழன்று விழுந்ததால், மாணவர்கள் பலர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை, திருவொற்றியூர், சத்தியமூர்த்தி நகரில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர்.

இன்று காலை சுமார் 10 மணியளவில் ஒன்றாம் வகுப்பில் ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது வகுப்பில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர்.

ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, வகுப்பறையில் இருந்த ஃபேன் திடீரென கழன்று விழுந்தது. ஃபேன் சுற்றிக் கொண்டிருந்த வேகத்தில் கீழே விழுந்ததால், மாணவர்கள் மீது அதன் பிளேடுகள் வெட்டியது.

இதில், மாணவி மோனிஷா, மாணவன் கணேஷ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். மற்ற மாணவ - மாணவிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வகுப்பறையில் இருந்த ஃபேன் கழன்று விழுந்ததால், பெரிதும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவல் அறிந்த பெற்றோர்கள், பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், வகுப்பறையில் உள்ள மின் விசிறிகள் அனைத்தும் ஆய்வு செய்யப்படும் என்றும் மாணவ - மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் கூறினர். 

இதையடுத்து மாணவர்களின் பெற்றோர்கள் கலைந்து சென்றனர். வகுப்பறையில் ஃபேன் கழன்று விழுந்தது தொடர்பாக சாத்தாங்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.