தற்போது தமிழகம் முழுவதும் டெங்கு, மலேரியா உள்ளிட்ட மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பல பகுதிகளில், இதுபோன்ற மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, போலி டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதாக தமிழக சுகாதார துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து அனைத்து மாவட்ட நிர்வாகத்துக்கும், தீவிர சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோமங்கலம் புதூர் பகுதியில் சித்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு லதா (63) என்பவர் சிகிச்சை அளிப்பதாக தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள், அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது,அங்கு ஏராளமான மருந்து, மாத்திரைகள், ஊசிகள் இருந்தன.

அவரிடம், அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது, மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததை அவர் ஒப்பு கொண்டார்.

மேலும் அவர், ஆயுர் வேத மருத்துவத்தில் டிப்ளமோ படித்து விட்டு நோயாளிகளுக்கு ஆங்கில மருந்து- மாத்திரைகளை வழங்கியுள்ளார். ஆயுர்வேத மருத்துவம் படித்தவர்கள் ஆங்கில மருந்துகள், ஊசிகளை பயன்படுத்தக்கூடாது. ஆனால் அவர் நடத்தி வந்த மருத்துவமனையில் குளுக்கோஸ் பாட்டில்கள், ஊசி, ஆங்கில மருந்துகள் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து கோமங்கலம் போலீசார், போலி பெண் டாக்டர் லதாவை கைது செய்தனர். பின்னர் அவர் பொள்ளாச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை கருமத்தம்பட்டியில் கடந்த 2 நாட்களுக்கு முன் இதேபோல் போலி மருத்துவமனை நடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.