நீலகிரி

அசல் ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டினால் அபராதம் வதிக்கப்படும் என்றும் அதற்கு வாகன ஓட்டுனர்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் காவலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி ஆட்டோ, மேக்சி கேப் மற்றும் வாடகை கார் உள்ளிட்ட வாகன ஓட்டுனர்களுக்கு, அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் ஊட்டியில் உள்ள போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், ஆய்வாளர் கதிரவன் தலைமை வகித்தார்.

அப்போது அவர், “தமிழகம் முழுவதும் அனைத்து வாகனம் உபயோகிப்பவர்களும் செப்டம்பர் 1–ஆம் தேதி (இன்று) முதல் தங்களது அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா உத்தரவின் பேரில், அனைத்து வாகன ஓட்டுனர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சாலை விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படுவதை குறைக்கவும், போலி வாகன உரிமம் வைத்து வாகனம் இயக்குபவர்களை கண்டறியவும், அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களை தடுக்கவும், முறையாக ஓட்டுனர் பயிற்சி பெறாமல் வாகனம் இயக்குபவர்களை கண்டறியவும், அதிகளவு பாரம் ஏற்றி வரும் கனரக வாகனங்களை ஒழுங்கு படுத்துவதுடன் வாகனங்கள் மூலம் நடைபெறும் கடத்தல் மற்றும் இதர குற்றங்களை தடுக்க உதவும் வகையில் உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, ஊட்டி நகரில் லாரி, மினி பேருந்து, ஆட்டோ, வாடகை வாகனம் மற்றும் இருசக்கர வாகனம் இயக்குபவர்கள் தங்களது அசல் ஓட்டுனர் உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஆட்டோ, மேக்சி கேப் ஓட்டுனர்கள் சங்க பிரதிநிதிகள் தங்களுடைய உறுப்பினர்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் காவலாளர்கள் சோதனையின்போது, வாகன ஓட்டுனர்களிடம் அசல் ஓட்டுனர் உரிமம் இல்லையென்றால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

இதற்கு வாகன ஓட்டுனர்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

இதுகுறித்து ஓட்டுனர்கள் தெரிவிக்கையில், “அசல் உரிமத்தை வைத்துக் கொண்டு வாகனங்களை இயக்குவது என்பது பாதுகாப்பற்றது. உரிமம் தொலைந்து போக வாய்ப்புள்ளது. மீண்டும் புது உரிமம் பெறும் வரை வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்படும்.

எனவே அரசு இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் அல்லது மறு பரிசீலினை செய்ய வேண்டும். இல்லையெனில் உரிமம் தொலைந்து போனால் உடனடியாக மாற்று உரிமம் வழங்க வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தனி சேவை மையத்தை அமைக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.