தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே கதிராமங்கலம் கிராமத்தில், ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். அதில், ஜெயராமன் மட்டும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கதிராமங்கலத்தை விட்டு நிரந்தரமாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும், இதற்காக போராடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பொது மக்கள் அய்யனார் கோவிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைதொடர்ந்து அண்ணாதுரை என்பவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டார். அவருக்கு ஆதரவாக ஊர் மக்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது கிராம மக்கள் "மத்திய மாநில அரசுகள் கதிராமங்கலம் மக்களின் பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் கண்களை மூடிக் கொண்டுள்ளது" என்பதை வலியுறுத்தி தங்களுடைய கண்களை கைகளால் மூடி உணர்வுகளை வெளிப்படுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கதிராமங்கலத்தில் நேற்று 13வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். இதில் 60க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இன்று 14வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது.