டிட்வா புயல் தென்னிந்திய கடற்கரை மாநிலங்களை அச்சுறுத்தி வருவதால், தமிழகம் மற்றும் ஆந்திராவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்னிந்திய கடற்கரை மாநிலங்களுக்கு டிட்வா புயலின் அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகமும், ஆந்திரப் பிரதேசமும், புதுச்சேரியும் அதிக ஆபத்துப் பகுதியில் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலெர்ட்) விடுத்துள்ளது. புயல் தாக்கம் காரணமாக பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கனமழை
கடற்கரை மாவட்டங்களில் கடும் காற்றும் மிக கனமழையும் காரணமாக பயணத்திலும் பொதுப்பணிகளிலும் பெரும் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன. மீட்பு நடவடிக்கைக்காக NDRF மற்றும் SDRF அணிகள் முழு தயார்நிலையில் பணியமர்த்தப்பட்டுள்ளன. இன்று காலைப்பகுதி முதல் தமிழகத்தின் பல கடற்கரை மாவட்டங்களில் மழை மேலும் தீவிரமடைந்துள்ளது. ராமநாதபுரம், நாகை, தஞ்சை, சென்னை போன்ற பகுதிகளில் வானிலை திடீரென மோசமடைந்தது.
தமிழகம் - ஆந்திரா எல்லைப்பகுதி
சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் தென் மற்றும் வட தமிழகம் முழுவதும் பரவலான மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தையும், ஆந்திரத்தையும் இணைக்கும் கடற்கரை எல்லைப் பகுதிகளில் புயல் தாக்கம் மிக அதிகமாக தெரிகிறது. கடலில் மிக உயர்ந்த அலைகள் எழுவதால் துறைமுகங்களில் எச்சரிக்கை கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன. மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை கிராமங்களில் உள்ள பள்ளிகள் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிப்பு
பல பகுதிகளில் மின்துறையினர் அவசரகால பணிகளில் ஈடுபட்டு மின் தடங்கலை தவிர்க்க முயற்சிக்கின்றனர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாநிலம் முழுவதும் 28 NDRF / SDRF அணிகள் பணியில் உள்ளதாக தெரிவித்தார். இந்திய விமானப்படையும், கடல் காவல் படையும் அவசர சூழ்நிலையால் உடனடி உதவிக்கு தயாராக உள்ளன. இப்போது வரை பெரிய சேதம் ஏதும் இல்லை என்றாலும், மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் அலெர்ட்டில் வைக்கப்பட்டுள்ளனர்.
ரயில், விமான சேவை பாதிப்பு
புயலின் தாக்கம் விமானம் மற்றும் ரயில் சேவைகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் கடும் காற்று, மழை காரணமாக 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பல விமானங்கள் தாமதமாகவோ மாற்றி இயக்கப்பட்டவையாகவோ உள்ளன. தென் ரயில்வே பல ரயில்களை மாற்றி இயக்கியுள்ளது. பாம்பன் பாலம் பகுதியில் காற்றின் வேகம் குறைவதால் ராமேஸ்வரம் சேவைகள் மீண்டும் தொடங்கும் ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன.
இலங்கையில் புயல் பாதிப்பு
இதே நேரத்தில், இலங்கையில் டிட்வா புயல் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 158-ஐத் தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலச்சரிவு, திடீர் வெள்ளம் போன்ற விபத்துகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன. புயல் இலங்கையை கடந்தாலும் அதன் மறைமுக தாக்கம் இன்றும் தொடரும் என இலங்கை வானிலை துறை எச்சரித்துள்ளது. வட, வட-மத்திய, கிழக்கு, மத்திய மாகாணங்களில் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்றும், மேற்குத் திசை பகுதிகளிலும் 50 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.


