இலங்கையில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய 'டிட்வா' புயல், தற்போது இந்தியாவின் தெற்கு கடற்கரையை நோக்கி நகர்கிறது.
இலங்கையை தாக்கி பெரும் அழிவை ஏற்படுத்திய ‘டிட்வா’ புயல் தற்போது இந்தியாவின் தெற்கு கடற்கரையை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. வங்கக்கடலில் உருவான இந்த கடும் புயல், இலங்கையில் 159 உயிரிழப்புக்கு காரணமாகியுள்ளது. தற்போது நாகப்பட்டினம்–வேதாரண்யத்திலிருந்து சுமார் 80 கிமீ தூரத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
மத்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, புயல் வட–வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (நவம்பர் 30) அதிகாலையில் வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா கடற்கரை அருகில் உள்ள தென்மேற்கு வங்கக்கடலை அடையும் வாய்ப்பு உள்ளது. இந்த பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
மழைக்கு எச்சரிக்கை
தமிழக கடற்கரை, புதுச்சேரி பகுதிகளில் 80 கிமீ வரை பலத்த காற்று வீசும் அபாயம் உள்ளதாக ஐஎம்டி எச்சரித்துள்ளது. சென்னை உட்பட 13 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட், புதுச்சேரி மற்றும் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் அடுத்த 5 நாட்கள் லேசான மழை நீடிக்கும்.
வேதாரண்யத்தில் உப்பளங்கள் மூழ்கின
கனமழையின் தாக்கத்தால் வேதாரண்யத்தில் உள்ள 9,000 ஏக்கர் உப்பளங்கள் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளன. மாநிலம் முழுவதும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, 6,000 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளது வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார். 28 தேசிய மற்றும் மாநில பேரிடர் அணிகள் பணி நடைபெற்று வருகின்றன.
கடலோரங்களுக்கு எச்சரிக்கை
கடலூர் மாவட்டத்தில் மட்டுமே 929 கர்ப்பிணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது அதிகாரிகள் நியமனம். கடலோரப் பகுதிகளில் வெள்ளபெருக்கு, நீர்மட்ட உயர்வு, போக்குவரத்து பாதிப்பு போன்றவை ஏற்படுவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையில் அவசரநிலை
இலங்கையில் ‘டிட்வா’ புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால் அரசாங்கம் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. இதுவரை 191 பேர் காணாமல் போயுள்ளனர். 774,000 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 100,000 பேர் 798 நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 700க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. கொழும்பு துறைமுகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு டிசம்பர் 16 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தாழ்வு மண்டலமாக மாறும்
டிட்வா புயலின் தாக்கம் காரணமாக நாகை, காரைக்கால், புதுச்சேரி, கடலூர் துறைமுகங்களில் எண் 5 புயல் எச்சரிக்கை கூண்டு தொடர்ந்து செயல்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சென்னை, எண்ணூர், பாம்பன், தூத்துக்குடி, காட்டுப்பள்ளி துறைமுகங்களில் எண் 4 புயல் எச்சரிக்கை கூண்டு மாற்றமின்றி நிலுவையில் உள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, டிட்வா புயல் இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வழுத்தப் பகுதியில் தளர்ந்து, தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.


