அரசு மருத்துவ கல்லூரி இடங்களுக்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு மட்டும் விலக்களிக்க மத்திய அரசு ஒத்துழைப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மேலும் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு என்பது சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்பில் நீட் தேர்வு என்ற முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி தேர்வையும் நடத்தி முடித்தது. இதில் தமிழத்தை சேர்ந்த மாணவர்கள் பெரிதும் பின் தங்கினர். இதனால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்துகிறது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கப்பட வேண்டும் என்று தமிழக அமைச்சர்கள், மத்திய அரசாங்கத்திடம் முறையிட்டு வருகின்றனர். தமிழக மருத்துவர் மாணவர் சேர்க்கையில் 85 சதவீதம் உள் இட ஒதுக்கீடு பெறும் வகையில், தமிழக அரசு அரசாணை கொண்டு வந்தது.

இந்த அரசாணையை எதிர்த்து சி.பி.எஸ்.இ. மாணவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை அடுத்து, தமிழக அரசின் அரசாணைக்கு நீதிமன்றம் தடை விதித்தது.

உயர்நீதிமன்ற தடையை எதிர்த்து தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிப்பது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அமைச்சர்கள் சந்தித்து வருகின்றனர். தமிழகம், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுமா என்று மாணவர்களும், பெற்றோர்களும் கவலையடைந்துள்ளனர்.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், சென்னை, தாம்பரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழக அரசு மருத்துவ கல்லூரி இடங்களுக்கு மட்டும் நீட் தேர்வில் ஓராண்டுக்கு விலக்களிக்க ஒத்துழைப்பதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு இது பொருந்தாது என்று கூறினார். ஏனென்றால், இது நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்ட நிலையில், அரசு மருத்துவ கல்லூரிக்கு மட்டுமே விலக்கு கொடுக்க அனுமதி கேட்டால் மத்திய அரசு ஒத்துழைக்க தயார் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படுவதை அடுத்து, இந்த ஓராண்டுக்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்களிக்கப்படுவதற்கு மத்திய அரசு ஒத்துழைக்கும் என்றார். 

ஆனாலும், நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு என்பது கிடையாது என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சையடுத்து, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்களிப்பது குறித்து தமிழக அரசு உடனடியாக அவசர சட்டம் இயற்றும் என்று தெரிகிறது.