செங்கோட்டையனின் ஆதரவாளரான அதிமுக முன்னாள் எம்.பி சத்யபாமாவின் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார்.
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மகளிரணி பொறுப்பாளர் பதவியில் இருந்து முன்னாள் எம்.பி சத்யபாமா விடுவிக்கப்பட்டுள்ளார். செங்கோட்டையன் ஆதரவாளரான சத்யபாமாவின் பதவியை பறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை கட்சியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்தார்.
செங்கோட்டையன் ஆதரவாளர் சத்யபாமா
இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் பதவிகளையும் இபிஎஸ் அதிரடியாக பறித்தார். நேற்று செங்கோட்டையுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த சத்யபாமா, தனது பதவியை ராஜினாமாக செய்யப்போவதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில், தான் செங்கோட்டையன் ஆதரவாளரான சத்யபாமாவின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
சத்யபாமா பேட்டி
இதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய சத்யபாமா, ''ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மகளிரணி பொறுப்பாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியில் இருக்கும் நான் எனது ராஜினாமா கடிதத்தை செங்கோட்டையனிடம் அளிக்க உள்ளேன். ஜெயலலிதா காலத்தில் இருந்தே கட்சியில் இருந்து யாரும் விடுபட்டால் அவர்களை யாரும் தொடர்பு கொள்ள மாட்டார்கள்.
அதிமுக ஒன்றுபட வேண்டும்
ஆனால் செங்கோட்டையனுக்கு ஈரோடு மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்றியணைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அது கண்டிப்பாக நடைபெறும்'' என்று தெரிவித்தார்.
செங்கோட்டையனுக்கு பெருகும் ஆதரவு
இதற்கிடையே அதிமுகவில் பதவி பறிக்கப்பட்ட செங்கோட்டையனுக்கு ஆதரவு பெருகி வருகிறது. கோபிசெட்டி பாளையத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர். ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்கள் பலர் பலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். ஓபிஎஸ், டிடிவி தினகரன் செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் செங்கோட்டையன் நன்றி தெரிவித்துள்ளார்.
