EVKS elagovan warning to bjp
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்துவதற்கு காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அந்நிய முதலீட்டு அளவை குறைத்து காட்டி அனுமதி வழங்கி உள்ளதாக புகார் எழுந்தது.
இதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றதாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதைடுத்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் வீடு அலுவலகங்கள் உள்ளிட்ட 17 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு நடத்தி வருகிறது. மேலும் கார்த்தி சிதம்பரத்திடமும் வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே ப.சிதம்பரம் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி மணப்பறை அருகே உள்ள வையம்பட்டியில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை எரித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்த வருமான வரி சோதனைக்கு காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ப.சிதம்பரத்தை குறிவைத்து அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாகவும் அதைதொடர்ந்து சி.பி.ஐ சோதனை என்ற தொடர் தாக்குதலை மத்திய அரசு ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
பா.ஜ.க அரசின் இது போன்ற செயல்கள் மிகவும் கண்டனத்திற்குரியது எனவும் மோடியின் இந்த வெற்று மிரட்டல்களுக்கு எந்த காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் பயப்படமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற மிரட்டல் சோதனைகள் தொடருமானால் பா.ஜ.கவை மக்கள் விரைவில் புறக்கணிப்பார்கள் என தனது அறிக்கையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குறிபிட்டுள்ளார்.
