கடலூர்,
புகாருக்கு நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாமியாரும், மருமகனும் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைப்பெற்றது. இதில் தங்களின் கோரிக்கைகளை மனுவாக எழுதி கொண்டு வந்த பொதுமக்கள், அதை பதிவு செய்வதற்காக ஆட்சியர் அலுவலகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
அப்போது ஆண், பெண் இருவர் தாங்கள் கையில் வைத்திருந்த பாட்டில்களை எடுத்து, அதில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி திடீரென தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
இதனைக் கண்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலூர் புதுநகர் காவலாளர்கள் மற்றும் பொது மக்கள் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அவர்கள் உடலில் தண்ணீரை ஊற்றி, அவர்களை பாதுகாப்பாக அழைத்துச்சென்று காவலாளர்கள் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர்கள் புவனகிரி தாலுகா துறிஞ்சிக்கொல்லை கிழக்குத் தெருவைச் சேர்ந்த பாவாடை (36) என்றும், உடன் வந்த பெண், அவரது மாமியார் கொளஞ்சி என்றும் தெரிந்தது.
மேலும், விசாரணையில், பாவாடைக்கு திருமணமாகி நதியா என்கிற மனைவியும், 3 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து, அங்கு அவர் சம்பாதித்த பணத்தை அவருடைய மனைவி நதியாவுக்கு அனுப்பி வந்துள்ளார்.
இதற்கிடையில் அவர் ஊருக்கு திரும்பி வந்த போது, 22 பவுன் நகைகள், ரூ.7 இலட்சம் பணத்துடன் அவருடைய மனைவி மாயமாகி விட்டார். இது பற்றி மாமியார் கொளஞ்சியிடம் கூறிய போது, அவரும் மனவேதனை அடைந்தார்.
இதையடுத்து மனைவியையும், நகை, பணத்தையும் மீட்டுத்தர வேண்டும் என்று பாவாடை சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளரிடம் மனு அளித்ததாகவும், ஆனால் காவல் ஆய்வாளர் உரிய விசாரணை நடத்தவில்லை என்று கூறி, அவர் ஆட்சியர், காவல் உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, காவல் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாமியாருடன் சேர்ந்து தீக்குளிப்பதற்காக வந்ததாகவும், ஆனால் அதற்குள் எங்களை காப்பாற்றி விட்டதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தார். மனுவை பெற்ற அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இருப்பினும்
இந்தச் சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகம் அதிர்ந்தது.
