மறைந்த பிரதமர் இந்திரா காந்தி குறித்த கதாபாத்திரம் பராசக்தி படத்தில் சிறுமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறி காங்கிரஸ்காரர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் வெளியான 'பராசக்தி' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 1965 ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை பராசக்தி பேசுவதால் திமுகவினர் இந்த படத்தை கொண்டாடுகின்றனர்.
இந்திக்கு எதிரான போராட்டம்
தணிக்கை வாரியம் சென்சார் சர்பிடிகேட் வழங்காததால் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகாத விரக்தியில் இருக்கும் விஜய் ரசிகர்கள் பராசக்தியை கழுவி கழுவி ஊற்றுகின்றனர். இதேபோல் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தபோது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்ததால் காங்கிரஸ் அரசு இந்திக்கு எதிராக போராடியவர்களை எப்படியெல்லாம் ஒடுக்கியது என படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பராசக்தி படத்துக்கு எதிராக காங்கிரஸ்காரர்கள் பொங்கியெழுந்தனர்.
பராசக்தி காங்கிரஸ்கார்கள் எதிர்ப்பு
குறிப்பாக மறைந்த பிரதமர் இந்திரா காந்தி குறித்த கதாபாத்திரம் பராசக்தி படத்தில் சிறுமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறி காங்கிரஸ்காரர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இது போதான்று பராசக்தி படக்குழுவினர் பிரதமர் மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டது காங்கிரஸ் கட்சியினரை மேலும் சூடேற்றியுள்ளது.
இபிஎஸ் கருத்து
அதே வேளையில் அதிமுக மற்றும் பாஜகவினரும் பராசக்தி படத்தை பெரிய அளவில் விமர்சிக்கவில்லை. இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் பராசக்தி குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த இபிஎஸ், ''பராசக்தி படத்தை வெறும் பொழுதுபோக்கான படமாக மட்டுமே பார்க்க வேண்டும். அப்போது அதிமுக தனியாக பிரியவில்லை. அதிமுகவும், திமுவும் ஒன்றாக தான் இருந்தது.
தமிழுக்காக உயிர்நீத்த முன்னோர்கள்
நமது தாய் மொழி தமிழை காக்க முன்னோர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அதை வைத்து படம் எடுத்துள்ளனர். தமிழ் மொழிக்காக உயிர் நீத்தவர்களுக்கு அதிமுக ஆண்டுதோறும் மரியாதை செய்து வருகிறது'' என்று தெரிவித்துள்ளார். இந்த பேட்டியின் மூலம் இபிஎஸ் படத்தை பெரிதாக விமர்சிக்கவில்லை. இது சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


