நோயாளிகளை மருத்து பயனாளிகள் என்று தமிழக அரசு பெயர் மாற்றியதற்கு முதல்வர் ஸ்டாலினை எடப்பாடி பழனிசாமி கிண்டலடித்து பேசியுள்ளார். அப்பா, அப்பா பெயரையாவது விட்டு வையுங்கள் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருபவர்களை இனி நோயாளிகள் என கூப்பிட கூடாது. மருத்துவ பயனாளிகள் என்றே அழைக்க வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் கூறியியிருந்தார். அதன்படி நோயாளிகள் என்பதை மருத்துவ பயனாளிகள் என மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இனி நோயாளிகள் அல்ல; மருத்துவ பயனாளிகள்
இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளர் வெளியிட்ட அரசாணையில், 'மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் சேவைகளைப் பெற வருபவர்கள் 'நோயாளிகள்' என அல்லாமல் 'மருத்துவப் பயனாளிகள்' என குறிப்பிடப்பட வேண்டும்.
மருத்துவம் ஒரு மனிதநேயம் மிக்க சேவையாக உள்ளதால், "நோயாளி" என்ற சொல்லுக்கு பதிலாக "பயனாளி" என குறிப்பிட வேண்டும். இந்த உத்தரவு மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் அமல்படுத்த வேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது.
டிசைன், டிசைனாக பெயர் மாற்றுவதால் என்ன பயன்
இதற்கு ஒரு சிலர் வரவேற்பு தெரிவித்தாலும் பல்வேறு தரப்பினர், 'இப்படி விளம்பரத்துக்காக டிசைன், டிசைனாக பெயர் மாற்றுவதை விட்டு விட்டு அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்துங்கள். அங்கு அனைத்து வசதிகளும் மக்களுக்கு கிடைக்கும்படி செய்யுங்கள்' என்று கருத்துகளை பதிவு செய்தனர். இந்நிலையில், நோயாளிகளின் பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலினை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டம் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலினை கலாய்த்த இபிஎஸ்
இது தொடர்பாக 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற தனது பிரசார சுற்றுப்பயணத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ''இன்னைக்கு பத்திரிகையில் பார்த்தேன். இனி மருத்துவமனைக்கு சென்றால் பயனாளி என்று தான் சொல்ல வேண்டுமாம். பேஷன்ட் (நோயாளிகள்) என்று சொல்லக் கூடாதாம். பெயர் வைப்பதற்கு ஒரு விவஸ்தை வேண்டாம். வேண்டுமென்றே திட்டமிட்டு எதாவது ஒரு பெயர் வைக்க வேண்டியது.
அப்பா, அம்மா பெயரை மாத்திடாதீங்க
தயவு செய்து ஸ்டாலின் அவர்களே. ஒரு பெயரை மட்டும் மாற்றி விடாதீங்க. அப்பா, அம்மா என்ற இரன்டு பெயரை மாத்திடாதீங்க. விட்டால் அதையும் மாத்திடுவாங்க. ஏன் என்றால் எல்லாத்துக்கும் பெயர் வைக்கிற வேலை. இல்லை பெயர் மாற்றுகிற வேலை. இதை இரண்டையும் தான் ஸ்டாலின் முதலமைச்சாரனதில் இருந்து நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒன்னு பெயர் வைப்பார்; இல்லை பெயரை நீக்குவார். இப்படிபட்ட ஒரு முதலமைச்சரை இந்தியாவில் எங்கும் பார்க்க முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.
