திமுக மூத்த அமைச்சர்களான துரைமுருகன், கே.என்.நேரு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மீது விரைந்து விசாரணையைத் தொடங்க வலியுறுத்தும் விதமாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி இன்று ஆளுநர் ரவியை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளார்.

தமிழகத்தில் அடுத்த 4 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் தொடர்பாக ஆதாரங்கள், புகார் மனுவை அளிக்க உள்ளார்.

முன்னதாக தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு மீது ரூ.1020 கோடிக்கு ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்த அமலாக்கத்துறை இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துமாறு தமிழக காவல் துறைக்கு இரு முறை கடிதம் எழுதி பரபரப்பை உருவாக்கியது.

அதே போன்று திமுகவின் மற்றொரு மூத்த அமைச்சரான துரைமுருகன் மீதான ரூ.3000 கோடி ஊழல் தொடர்பாகவும் விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரிக்கை மனுவை வழங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் பல அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்தும், குற்றச்சாட்டுகள் மீதான ஆதாரங்களை வழங்கவும் உள்ளதாக சொல்லப்படுகிறது.