போட்டோ ஷூட் மட்டுமே எடுக்கும் ஸ்டாலின்.! தெம்பில்லாத முதல்வர்- விளாசும் எடப்பாடி

கேரளாவில் இருந்து மருத்துவ மற்றும் இறைச்சிக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதால் அதிர்ச்சி. எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்து, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.

EPS accuses Kerala of dumping medical and meat waste in Tamil Nadu KAK

கேரள கழிவுகள் தமிழகத்தில்

கேரளாவில் உள்ள மருத்துவ கழிவுகள், இறைச்சி கழிவுகளை தமிழகத்தில் கொட்டப்படும் நிலையானது தொடர்ந்து நீடித்து வருகிறது. அரசும் பல கட்டுப்பாடுகள் விதித்தாலும் கண்டு கொள்ளாமல் கேரளாவில் இருந்து சோதனைச்சாவடி அல்லாத வழித்தடங்களில் மினி லாரிகளில் எடுத்து வரப்படும் இறைச்சிக் கழிவுகள், தமிழகத்தில் கொட்டப்படுவதாக புகார் எழுந்து வருகிறது. மேலும் தற்போது கேரள மாநிலத்தில் உள்ள மருத்துவ கழிவுகள் கோவை, பொள்ளாச்சி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கொட்டப்படுகிறது.

மேலும் நடுக்கல்லூர் பகுதிகளில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதாகவும் ஆதாரத்தோடு புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கேரள அரசின் செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 

இறைச்சி, மருத்துவ கழிவுகள்

கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் தொடர்ந்து கொட்டப்பட்டு வரும் நிலையில், தற்போது திருநெல்வேலி மாவட்டத்தின் கல்லூர், பழவூர் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டப்பட்டிருப்பதற்கு எனது கடும் கண்டனம். கேரள முதல்வருடன் கைகுலுக்கி போட்டோஷூட் எடுப்பதில் மட்டும் முனைப்பாக இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, முல்லைப் பெரியாற்றில் மாநில உரிமைகளை நிலை நாட்ட தான் திராணியில்லை என்று பார்த்தால்,  அண்டை மாநிலத்தின் கழிவுகள் நம் மாநிலத்தில் கொட்டப்படுவதை எதிர்க்கக் கூட தெம்பில்லாத முதல்வராக இருக்கிறார்.

 வளமிகு தமிழ்நாடு, யாருடைய குப்பைத் தொட்டியும் அல்ல! கொட்டப்பட்டு இருக்கக்கூடிய மருத்துவ கழிவுகளால் மக்களுக்கு பல்வேறு தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளதால் அனைத்து குப்பைகளும் உடனே அகற்றப்பட வேண்டும்; இனி இதுபோன்று பிற மாநில கழிவுகள் கொட்டப்படாத அளவிற்கு திடமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென  திமுக அரசை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios