அரியலூர்

இபிஎஸ் – ஓபிஎஸ் அணிகள் மீண்டும் இணைந்ததைய் அரியலூரில் பல்வேறு இடங்களில் அதிமுக-வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

அதிமுக-வில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என இரண்டு அணிகளாக இருந்தவர்கள் நேற்று ஓர் அணியாக மீண்டும் இணைந்தனர்.

அரியலூர் மாவட்டம், திருமானூரில் ஒன்றியச் செயலாளர் குமரவேல் தலைமையில், அதிமுக-வினர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் மக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். இதில் இரண்டு அணிகளையும் சேர்ந்த பொறுப்பாளர்கள் பலர் பங்கேற்றனர்.

இதேபோல செந்துறையில் அதிமுக ஒன்றிய கழகத்தின் சார்பில், ஒன்றியச் செயலாளர் முள்ளுக்குறிச்சி சுரேஷ் தலைமையில் பட்டாசு வெடித்து மக்களுக்கு இனிப்பு வழங்கி இணைப்பைக் கொண்டாடினர்.

அதேபோன்று ஆண்டிமடம் அதிமுக ஒன்றியச் செயலாளர் மருதமுத்து தலைமையில் ஆண்டிமடம் நான்கு சாலை சந்திப்பில் அதிமுக இரு அணிகளும் இணைந்ததை பட்டாசு வெடித்து, மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இதில் அரியலூர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் ரீடு.செல்வம், ஒன்றியப் பொருளாளர் செல்வராசு, அவைத் தலைவர் செல்வையா, பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் உள்பட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமாக பங்கேற்றனர்.