திருப்பூர்

கடந்த முறை அத்திகடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றுகிறேன் என்று கூறிவிட்டு ஏமாற்றத்தை அளித்ததுபோல இந்த முறையும் நடக்காமல தமிழக அரசு அத்திகடவு - அவிநாசி திட்டப்  பணிகளைப் போர்க்கால அடிப்படையில் தொடங்க வேண்டும் என்று அதன் போராட்டக் குழுவினர் கோரியுள்ளனர்.

சமீபத்தில் வெளியிட்ட தமிழக நிதிநிலை அறிக்கையில், திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட  மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை தொடங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, இந்த திட்டத்திற்கு  ரூ.1789 கோடியில் பணிகள் தொடங்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னிர் செல்வம் அறிவித்தார். 

இந்த அறிவிப்பு குறித்து அத்திகடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி பல வருடங்களாக போரடி வரும் "அத்திகடவு - அவிநாசி திட்டப்  போராட்ட குழுவினர்" கூறியது: 

"கடந்தாண்டு டிசம்பரில் இந்தத் திட்ட பணிகள் தொடங்கப்படும் என்று  முதல்வர் அறிவித்திருந்தார். ஆனால்,  பணிகள் தொடங்காததது ஏமாற்றம் அளித்தது. இருந்தாலும்கூட,  தற்போது இத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளனர். எனவே, இந்தத் திட்டப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தனர்.