Asianet News TamilAsianet News Tamil

மாதம் 5000 சம்பளத்திற்கு வேலை செய்ய தயராக இருக்கும் பொறியியல், முதுகலை பட்டதாரிகள்...

Engineering and post graduates are willing to work for 5000 monthly salary ...
Engineering and post graduates are willing to work for 5000 monthly salary ...
Author
First Published Feb 2, 2018, 8:27 AM IST


சேலம்

12, 10-ஆம் வகுப்பு கல்வித்தகுதியோடு, தொகுப்பு ஊதியமாக மாதம் ரூ.5000 மட்டுமே வழங்கப்படும் ரேசன் கடை விற்பனையாளர் பணிக்கு நடத்தப்பட்ட தேர்வில் பொறியியல், முதுகலை பட்டதாரிகள் ஏராளமானோர் குவிந்தனர்.

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் ரேசன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் உதவியாளர் பணிக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

கடந்தாண்டு டிசம்பர் 15-ந் தேதியுடன் விண்ணப்பிக்க கடைசிநாள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்த காலிப் பணியிடங்கள் 1074.

அவற்றில் சேலம் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள ரேசன் கடைகளில் விற்பனையாளர் பணிக்கு மட்டும் 115 பணியிடங்கள் காலியாக இருந்தன. கல்வி தகுதி பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

கட்டுனர் பணிக்கு 22 இடங்கள் காலியாக உள்ளன. அதற்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதி. வயது வரம்பு 18 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் தகுதி என்று கூறப்பட்டிருந்தது.

சேலம் முழுவதும் இருந்து சுமார் 17 ஆயிரம் பேர் விண்ணப்பத்திருந்தனர். அவர்களுக்கு நேரடி தேர்வுக்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று முதல் கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பிற்காக 2000 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. சேலம் அழகாபுரத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் சமுதாய கூடத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கியது.

இதனை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திரபிரசாத் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து கூட்டுறவுத்துறையின் அதிகாரிகள் சான்றிதழ் சரிபார்க்கும் பணியினை நடத்தினர்.  காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை 1000 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்தது. பிற்பகல் 2 மணி முதல் 5 மணிவரை 2-ம் கட்டமாக 1,000 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய கூடத்தில் போடப்பட்ட 40 மேஜைகளில், ஒரு மேஜைக்கு தலா 3 பேர் வீதம் அமர்ந்து 120 பேர் இந்த பணியினை மேற்கொண்டனர். கல்வித்தகுதி பிளஸ்-2, பத்தாம் வகுப்பு என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் வேலைவாய்ப்பு இன்றி உள்ள பொறியியல், முதுகலை பட்டதாரிகள் என்று பட்டப்படிப்பு முடித்தவர்களே ஏராளமானவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

சில பெண்கள் தங்களது கைக்குழந்தை மற்றும் கணவர், பெற்றோர்களுடன் வந்திருந்திருந்தனர். தொடர்ந்து வருகிற 10-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது.

ரேசன் கடை விற்பனையாளர் பணிக்கு தொகுப்பு ஊதியமாக மாதம் ரூ.5000 வீதம் ஓராண்டுக்கு வழங்கப்படும். பணி நிரந்தரம் செய்யப்பட்டு பிறகே மாதம் ரூ.11 ஆயிரத்திற்கு மேல் சம்பளம் கிடைக்கும். 

Follow Us:
Download App:
  • android
  • ios