செந்தில் பாலாஜியை டெல்லி அழைத்து செல்ல அமலாக்கத்துறை தீவிரம்!
அமைச்சர் செந்தில் பாலாஜியை டெல்லி அழைத்து சென்று விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மற்றும் சட்டவிரோத கைது ஆகிய இரு மனுக்களின் மீது விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதனால், செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை 3ஆவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த 3ஆவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன், செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது. அவரை நீதிமன்ற காவலில் வைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சட்டப்படியானது என உத்தரவிட்டார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்குகள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது. இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்திருந்தது.
சொத்து குவிப்பு வழக்கில் விஜயபாஸ்கருக்கு சிக்கல்.! மீண்டும் நேரில் ஆஜராக நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இந்த நிலையில், செந்தில் பாலாஜி வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அவர் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் இல்லை எனவும், அவரை அமலாக்கத் துறை கைது செய்தது சரி என்றும் தீர்ப்பளித்தது. கைது செய்யப்பட்ட பிறகு ஆட்கொணர்வு மனு தக்கல் செய்ய முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜி கைதுக்கு எதிராக தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதேசமயம், கைது செய்யப்பட்டதில் இருந்து 15 நாட்கள் கடந்தபின் அமலாக்கத்துறையினரால் ஒருவரை காவலில் எடுத்து விசாரிக்க முடியுமா என்ற விவகாரத்தை மட்டும் அரசியல் சாசன அமர்விற்கு உச்ச நீதிமன்றம் மாற்றியுள்ளது. செந்தில் பாலாஜி விவகாரத்தில் முக்கிய சட்ட சிக்கல் எழுந்த நிலையில் அரசியல் சாசன அமர்வு இதனை விசாரிக்க உள்ளது.
இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியை டெல்லி அழைத்து சென்று விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்ன புழல் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜியை பாதுகாப்பு மற்றும் மருத்துவ காரணங்களுக்காக டெல்லிக்கு அழைத்துச் சென்று விசாரிக்க அனுமதியளிக்கும்படி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. PTW (Prisoners Transit warrent) எனப்படும் கைதிகள் இடமாற்ற உத்தரவு பெற்று செந்தில் பாலாஜியை டெல்லி அழைத்துச் செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு தேவையான சிகிச்சையளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.