அரியலூர்

அரியலூரில் மார்ச் 13 ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், 8-ஆம் வகுப்பு முதல் பட்டம் படித்தவர்கள் வரை பங்கேற்று பயன்பெறுமாறு ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், "அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மார்ச் 13-ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் மகளிர் திட்டம் இணைந்து முகாமில் அரியலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடத்துகின்றன.

இதில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திருச்சி, சென்னை, கோவை, கரூர், திருப்பூர் மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் உள்ள நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.

18 முதல் 35 வயது வரையுள்ள 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள், பொறியியல், ஐடிஐ, டிப்ளமோ, தட்டச்சு மற்றும் கணினி பயிற்சி முடித்தவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம்.

மேலும், இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கு தேவையான திறன் பயிற்சியினை பெறுவது தொடர்பாக தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகத்தின் மூலம் ஆலோசனைகள், அயல்நாட்டு வேலைவாய்ப்பு பெறுவது தொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட கேட்டுக் கொள்கிறோம்" என்று அதில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.