சென்னை கிண்டியில் உள்ள தலப்பாக்கட்டி பிரியாணி கடையில் ஏற்பட்ட திடீர் தீயை ஊழியர்களும் தீயணைப்பு வீரர்களும் நீண்ட நேரம் போராடி அணைத்தனர். 

சென்னை கிண்டி, கத்திப்பாரா பாலாஜி மருத்துவமனையின்  அருகே திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி கடை உள்ளது. 

இந்த பிரியாணி கடையில் தினமும் மக்கள் கூட்டம் அலைமோதி கொண்டே இருக்கும். இந்நிலையில், இந்த கடையில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு மளமளவென  தீ பற்றி எரிந்தது. 

இதனால் அப்பகுதியே கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. இதைதொடந்து அங்கிருந்த பலரும் பதறியடித்து ஓட்டம் பிடித்து வெளியேறினர். 

இதையடுத்து கட்டுக்கடங்காமல் தீ பரவியதால் ஓட்டல் ஊழியர்களே ஒன்று திரண்டு அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீ பயங்கரமாக பற்றி எரிந்தது. 

இந்நிலையில், தகவலறிந்து வந்த தீயணைப்புப் படை வீரர்கள் தீயை நீண்ட நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சமையல் கூடத்தில் ஊழியர்களின் கவனக்குறைவால் தீ பரவிவிட்டது என்பதும் அரை மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது.