eleventh standard public exam results

11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.3% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 188 அரசு மேல்நிலைப்பள்ளிகளின் மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த கல்வியாண்டு வரை 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் தான் மேற்படிப்புக்கான துருப்புச்சீட்டு என்பதால், பெரும்பாலான பள்ளிகளில் 11ம் வகுப்பு பாடத்தை புறக்கணித்துவிட்டு 11ம் வகுப்பிலேயே 12ம் வகுப்பு பாடத்தை நடத்துகின்றனர்.

அதனால் 11 மற்றும் 12 ஆகிய இரண்டு வகுப்புகளிலும் மாணவர்கள் 12ம் வகுப்பு பாடத்தையே படிக்கும் நிலை இருந்தது. அதனால் 11ம் வகுப்பு பாடத்தில் இருக்கும் அடிப்படையான விஷயங்கள் மாணவர்களுக்கு தெரியவில்லை. அதனால் மேற்கல்விக்கான தேசிய அளவிலான தேர்வுகளில் தமிழக மாணவர்களால் சோபிக்க முடியாத நிலை இருந்தது. 

அதனால், ஆசிரியர்கள் 11ம் வகுப்பு பாடத்தை உறுதிப்படுத்தும் விதமாகவும் 11ம் வகுப்பு பாடத்தை மாணவர்கள் கற்றுத்தேரும் விதமாகவும் இந்த ஆண்டு முதல் 11ம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வை அறிமுகப்படுத்தியது தமிழக கல்வித்துறை. 

முதன்முறையாக இந்த ஆண்டு நடந்த 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8,63,668 மாணவ-மாணவிகள் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர்.

இந்த தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியாகின. இந்த முடிவுகளில், தேர்வு எழுதியதில் சுமார் 91.3% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.3% தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. 96.4% தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 

188 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11ம் வகுப்பு மாணவர்கள் 100%தேர்ச்சியைப் பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளை குறைவாக மதிப்பிட்டு, தனியார் பள்ளிகளின் மீதான மோகம் பெற்றோர்களுக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை பறைசாற்றும் விதமாக 188 பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதியதில் 87.4% மாணவர்களும் 94.6% மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.