elephant caught by forest officers

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் மூன்று பேரை கொன்ற ஒற்றை காட்டு யானைக்கு 4 மயக்க ஊசிகள் போடப்பட்டுள்ளன. யானை மயங்கியவுடன் காட்டுக்குள் விட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

காட்டுயானைக் கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை யானை, கடந்த சில நாட்களாக சூளகிரி அருகே சுற்றிவந்தது. நேற்று முன்தினம் காலை பத்தாகோட்டா கிராமத்தை சேர்ந்த ராஜப்பா என்பவரை அந்த யானை மிதித்து கொன்றது. மேலும் காட்டு யானை தாக்கியதில் அதே பகுதியை சேர்ந்த ரங்கநாதன் மற்றும் முனிகிருஷ்ணன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

நேற்று காலை சின்னாறு பகுதிக்குள் நுழைந்த யானை, தேவர் குட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி முனிராஜ் என்பவரை கொன்றது. ஒற்றை யானையின் அட்டூழியத்தால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே பயந்து பீதியில் இருந்தனர்.

இதையடுத்து காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். ஆனால் வனப்பகுதியில் யானை எங்கிருக்கிறது என்பதை பல மணி நேரம் தேடியும் நேற்று கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், இன்று காலை சின்னாறு அருகே ஒட்டையனூர் பகுதியில் தேவன் என்ற விவசாயியை யானை கொன்றது. 

இதைத்தொடர்ந்து ஒட்டையனூர் பகுதியில் இருந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மீண்டும் இன்று காலை தொடங்கின. துப்பாக்கி போன்ற அமைப்பு கொண்ட கருவி மூலம், தொலைவிலிருந்து ஒரு மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில், காட்டு யானை அங்கிருந்து ஓடிவிட்டது. மேலும் ஒரு ஊசி செலுத்தப்பட்டால் யானை மயங்கிவிடும் என்ற நிலையில், ராமாபுரம் வனப்பகுதியில் நின்றிருந்த யானைக்கு இரண்டாவது மயக்க ஊசியும் செலுத்தப்பட்டது. 

2 மயக்க ஊசிகள் செலுத்தப்பட்டதால் யானையின் ஆக்ரோஷம் தணிந்துள்ளது. ஆனால் யானை மயங்காததால் மேலும் 2 மயக்க ஊசிகள் செலுத்தப்பட்டன. இதையடுத்து மயக்கமடைந்த யானையை கர்நாடகாவின் பன்னார்கட்டா காட்டுப்பகுதிக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இப்போதுதான் சூளகிரி, சின்னாறு பகுதி மக்கள் சற்று மகிழ்ச்சியில் உள்ளனர்.