அறந்தாங்கி அருகே கஜா புயல் தாக்கி 30 நாட்களுக்கு பின்னர் மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. அந்த மகிழ்ச்சியை அப்பகுதி மக்கள் கொண்டுவதற்குள் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

கடந்த மாதம் கஜா புயல் டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கோரதாண்டவம் ஆடியது. இதனால் பலர் வீடு மற்றும் உடைமைகளை இழந்தனர். இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் கிராமப்புறங்களில் தற்போது வரை மின் விநியோகம் சீராகவில்லை. 

இதற்கிடையில் கஜா புயல் பாதித்து 30 நாட்களுக்கு பிறகு நேற்று மாலை அறந்தாங்கி பகுதிகளில் மின்விநியோகம் வழங்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அறந்தாங்கி அருகே உள்ள மங்களநாடு கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை. அதே ஊரில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயா மிக்சியை இயக்கினார். அப்போது அதில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்தது. 

இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்ககுப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கஜா புயல் தாக்கி 30 நாட்களுக்கு பிறகு நேற்று வந்த மின்சாரம் இன்று பெண்ணின் உயிரை பறித்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.