நாமக்கல்

மழைநீரிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் புதிய வழிமுறையைக் கண்டுபிடித்த ஒன்பதாம் வகுப்பு மாணவருக்கு "சர் சி.வி. ராமன் இளம் அறிவியல் கண்டுபிடிப்பாளர்" விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பெங்களூரு  மல்லேஸ்வரத்தில் உள்ள ராமன் இல்லத்தில் ராமன் ரிசர்ச் இன்ஸ்டியூட் டிரஸ்ட் (ஆர்ஆர்ஐடி) அமைப்பும், இன்னவொசன் அன்ட் சைன்ஸ் ப்ரமோசன் பவுண்டேசன் (ஐஎஸ்பிஎப்) அமைப்பும் இணைந்து புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான போட்டிகளை அண்மையில் நடத்தின.  

இதில், நாடு முழுவதிலுமிருந்து பள்ளி மாணவ, மாணவியர் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களின்  அறிவியல் கண்டுபிடிப்புகளை சமர்பித்தனர். 

இவர்களில் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஜேகேகே நடராஜா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவன் எஸ்.கோகுல்ராஜ் முதுநிலைப்பிரிவில் பங்கேற்றதோடு,  மழைநீரின் வேகத்தோடு, காற்றழுத்தம் கொடுப்பதால் மின்சாரம்  உற்பத்தியாவதையும், அதன்மூலம் இயந்திரம் செயல்பாடு குறித்தும் விளக்கினார். 

இந்தக் கண்டுபிடிப்பு சிறந்ததாகத் தேர்வு செய்யப்பட்டு, கோகுல்ராஜுக்கு "சர்.சி.வி.ராமன் இளம் அறிவியல் கண்டுபிடிப்பாளர்" விருதை சர்.சி.வி.ராமனின் மருமகள்டொமினிக்  ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

தமிழகத்திலிருந்து கலந்துகொண்ட மாணவர்களில் கோகுல்ராஜ் மட்டுமே விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.