கன்னியாகுமரியில் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய மனைவியை காப்பாற்ற முயன்ற கணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே இரணியல் அடுத்த தலக்குளம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த புனிதா என்ற பெண்ணை 5 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்தார். பெற்றோர் ஏற்காததால், தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். 

இந்நிலையில், வீட்டின் அருகே துணியை உலர்த்தியபோது கம்பியில் மின்சாரம் பாய்ந்துக் கொண்டிருந்ததை அறியாத புனிதா அதனை பிடித்துள்ளார். அவரது அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த சேகர், மனைவியை காப்பாற்றியுள்ளார். ஆனால் சேகரின் காலில் மின் பாய்ந்துக் கொண்டிருந்த கம்பி பட்டுள்ளது.மின்சாரம் தாக்கிய மனைவியை காப்பாற்ற சென்ற கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவிக்கு மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.