கரூர்

கரூரில் மின்வாரிய அலுவலக கட்டிட உரிமையாளரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி லஞ்ச ஒழிப்பு காவலாளர்களால் கைது செய்யப்பட்டார். விரைவில் அவர் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்.

கரூர் மாவட்டம், குளித்தலை அண்ணாநகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் பெரியண்ணன் மகன் பாபு (30). இவர் தான் வசிக்கும் வீட்டின் மாடிப்பகுதி கட்டிடத்தை மின்சார வாரியத்திற்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

அதில் தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் மின்னியல் வருவாய் பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதற்காக மின்சார வாரியத்தில் இருந்து மாதம் ரூ.12 ஆயிரத்தை பாபு வாடகையாக பெற்று வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கான வாடகையாக ரூ.1 இலட்சத்து 44 ஆயிரம் மின்சார வாரியத்தில் இருந்து பாபுவுக்கு வர வேண்டியிருந்தது. இதில் ரூ.84 ஆயிரத்திற்கான காசோலையை பாபு ஏற்கனவே பெற்றுவிட்டார். மீதமுள்ள ரூ.60 ஆயிரத்திற்கான காசோலையை பெறுவதற்காக கடந்த 19-ஆம் தேதி பாபு, குளித்தலை கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் தங்கவேலை அவரது அலுவலகத்தில் சந்தித்து இதுகுறித்து கேட்டுள்ளார்.

அப்போது வாடகை பாக்கி பணத்திற்கான காசோலையை தரவேண்டும் என்றால் தனக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என பாபுவிடம் தங்கவேல் கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பாபு திருச்சி இலஞ்ச ஒழிப்பு காவலாளர்களிடம் இதுகுறித்து நேற்று முன்தினம் புகார் அளித்தார்.

இதனையடுத்து நேற்று காலை பாபுவிடம் இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் இரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து மின்சார வாரிய செயற்பொறியாளர் தங்கவேலிடம் கொடுக்க அனுப்பி வைத்தனர்.

அதன்படி குளித்தலை கோட்ட மின்சார வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளர் தங்கவேலிடம் பாபு பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த திருச்சி இலஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், காவல் ஆய்வாளர்கள் சக்திவேல், அருள்ஜோதி, சேவியர்ராணி மற்றும் காவலாளர்கள் விரைந்துச் சென்று தங்கவேலை கையும் களவுமாக பிடித்தனர். மேலும் ரூ.2 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.

அதன்பின் அலுவலகத்தில் அவரது இருக்கை மேஜையில் சோதனை நடத்திய பின்னர் செயற்பொறியாளர் தங்கவேலின் சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பஞ்சபாளையத்தில் உள்ள அவரது வீட்டிலும், தற்போது குளித்தலை வைகநல்லூர் அக்ரஹாரத்தில் வசித்து வரும் வாடகை வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் சோதனை நடத்தினர்.

பின்னர் செயற்பொறியாளர் தங்கவேல் கரூர் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கைதான தங்கவேல் மீது மின்சார வாரிய உயர் அதிகாரிகள் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.