உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, வாக்கு எண்ணிக்கையை டிவியில் பார்த்து உற்சாகம் அடைந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த 19ம் தேதி தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர். முன்னதாக நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. அனைத்து டிவி சேனல்களிலும் வாக்கு எண்ணிக்கை குறித்த செய்தி ஒளிபரப்பானது.

இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா , தனது அறையில் இருந்தபடியே வாக்கு எண்ணிக்கையை கண்டு மகிழ்ச்சியடைந்தார். இதனால், அவர் உற்சாகமாக காணப்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.

அ.தி.மு.க. வேட்பாளர்கள் முன்னிலை பெற்றது முதல், வெற்றி பெற்றது வரை வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அவர் கண்காணித்துக் கொண்டிருந்தார். அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றதும் அவர் மகிழ்ச்சியடைந்து, உற்சாகமாக காணப்பட்டார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.