தஞ்சாவூரில், விவசாயியிடம் இருந்து ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.2 லட்சத்தை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி நெல்லித்தோப்பு ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி இடை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் தேர்தலில் களம் இறங்கியுள்ளன.
இதைதொடர்ந்து தேர்தல் ஆணையம், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்தல் கண்காணிப்பு குழு, பறக்கும் படை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று காலை தஞ்சாவூர் அருகே, நாஞ்சிக்கோட்டை பகுதியில் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை மறித்து சோதனை நடத்தினர். அந்த காரில் கட்டு கட்டாக பணம் இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து விசாரித்தபோது, தஞ்சாவூரை சேர்ந்த காமராஜ். விவசாயி. தனக்கு சொந்தமான பணத்தை கொண்டு செல்வதாக கூறினார். ஆனால், பணத்துக்கான எவ்வித ஆவணமும் அவரிடம் இல்லை. இதையடுத்து அதிகாரிகள், அந்த பணத்தை பறிமுதல செய்தனர். மொத்தம் ரூ.2 லட்சம் இருந்தது. பணத்துக்கான ஆவணத்தை காண்பித்த பிறகு, அதனை பெற்று செல்லும்படி கூறி, அவருக்கு அறிவுறுத்தி அனுப்பினர்.
