பீகாரைத் தொடர்ந்து தமிழகத்தில் அடுத்த வாரம் முதல் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தியாகராய நகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தொடர்ந்து வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் அடுத்த வாரம் முதல் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்னும் 6 மாத காலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சிறப்பு வாக்காளர் திருத்தப்பட்டியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

அண்மையில் பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை உருவாக்கியது. மேலும் இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்று விவாதத்தை ஏற்படுத்தியது. வாக்காளர் பட்டியலில் இருந்து கொத்துக் கொத்தாக பெயர்கள் நீக்கப்பட்படதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தன.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பீகார் மாநில இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் இணைந்து நாடு முழுவதும் மிகப்பெரிய பேரணி சென்றனர். இந்த பேரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.