Asianet News TamilAsianet News Tamil

புதிய நடைமுறைகளை மேற்கொள்ளும் தேர்தல் ஆணையம்: சத்யபிரத சாஹு தகவல்!

ஒரு வாக்காளரும் விடுபடக் கூடாது என்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கம் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்

Election Commission to adopt new procedure says TN Chief Electoral Officer satyabrata sahu smp
Author
First Published Mar 27, 2024, 8:58 PM IST

ஒரு வாக்காளரும் விடுபடக் கூடாது என்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கமாகும் என்றும் இதற்காக பல புதிய நடைமுறைகளை ஆணையம் மேற்கொண்டுள்ளது என்றும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி திரு சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் தயாரித்த நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் 2024 கையேடு வெளியீட்டு விழாவில் கையேட்டினை வெளியிட்டுப் பேசிய அவர், தபால் வாக்குகள் பதிவு செய்வதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் தாங்கள் பயிற்சி பெறும் இடத்திலேயே வாக்களிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது என்றும், 85 வயதைக் கடந்தவர்களும், மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், தபால் வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட்டிருப்பதையடுத்து சுமார் நான்கு லட்சம் பேர் அதற்கான படிவத்தை ஆர்வத்துடன் பூர்த்தி செய்து அளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

ராணுவத்தில் பணியாற்றுவோர் தபால் வாக்கு அளிப்பதில்  இருந்த சிரமங்கள்  நீக்கப்பட்டு தற்போது இடிபிபிஎஸ்  எனும் மின்னணு மூலம் பரிமாற்றம் செய்யும் வாக்களிப்பு முறை  கடைப்பிடிக்கப்படுகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.  ரயில்வே துறை மற்றும் ஊடகங்களில் பணியாற்றுவோரும், தபால் வாக்கு முறையை பயன்படுத்தலாம் என்ற அளவிற்கு நடைமுறையில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன என்று குறிப்பிட்ட தலைமைத் தேர்தல் அதிகாரி  ஒரு வாக்காளரும் விடுபடக் கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் நோக்கமே இதற்குக் காரணம் என்றார்.

மக்கள் ஓரிடத்தில் கூடி ஜனநாயகக் கடமையாற்றும் இடமாக வாக்குச் சாவடிகள் இருப்பதால் இங்கு நிழல் தரும் பந்தல்கள், குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதாகவும் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, உதவியாளர் போன்ற வசதிகள் செய்து தரப்படுவதாகவும் சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

ரூபாய் நோட்டுக் குவியலில் தூங்கும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசியல்வாதி!

தேர்தலில்  வாக்களித்து தங்களின் உரிமைகளை வெளிப்படுத்த மக்கள் ஆர்வமாக உள்ளனர் என்பதால் எல்லா ஊடகங்களிலிருந்தும் தகவல்களைத் திரட்டி இவற்றில் எது சரியானது என்பதை அறிந்து யாருக்கு வாக்களிப்பது என்பதை முடிவு செய்யும் திறனை இந்திய வாக்காளர்கள் பெற்றுள்ளனர் என்று கூறிய அவர், இத்தகைய தகவல்களை மேலும் கூடுதலாக அளிக்க இந்தக் கையேடு உதவும் என்றும் இதனை ஊடகங்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நடைபெற்றுள்ள தேர்தல்களைக் காணும் போது சராசரியாக 73 முதல் 74 சதவீதம் வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்று குறிப்பிட்ட அவர், இது வாக்காளர்களின் அதிகரித்து வரும் ஆர்வத்தை நிரூபிப்பதாக உள்ளது என்றார்.

அதன்பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த தலைமைத் தேர்தல் அதிகாரி, பணபலத்தைக் கட்டுப்படுத்துவதற்கான வாகன சோதனைகளில் பாகுபாடு காட்டப்படுவதில்லை என்றும், ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு 7 கண்காணிப்பு வாகன அணிகள் வீதம் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த பிறகும் சமூக ஊடகங்கள், யூடியூப் போன்றவற்றில் பிரச்சாரம் செய்யப்படுவது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர்,  பொது இடங்களில் மக்களைத் திரட்டி வாக்கு சேகரிப்பதற்கு அனுமதியில்லை என்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது என்பது தனி நபர் விஷயம் என்றும் கூறினார்.

வெறுப்புப் பேச்சு மீதான  நடவடிக்கை பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், இது தேர்தல் நடத்தை விதி சம்பந்தப்பட்டது என்பதால், தேர்தல் ஆணையம் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க இயலாது என்றாலும், இந்திய தண்டனைச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்  ஆகியவற்றின் கீழ் காவல் துறை மூலம் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios