குடிபோதையில் ஏற்பட்ட சண்டையில் தம்பியை சுட்டுக் கொன்ற சம்பவம் கிருஷ்ணகிரியில் நடந்துள்ளது. தம்பியை சுட்டுக் கொன்று விட்டு தலைமறைவாகி உள்ள அண்ணனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேவரப்பெட்டா மலைக்கிராமத்தைக் சேர்ந்தவர் புட்டண்ணா. இவரது மகன்கள் சங்கரப்பா, கணேஷ். நேற்று யுகாதி பண்ணடிகையையொட்டி, கிருஷ்ணகிரி சுற்றுப்புற பகுதியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்த கொண்டாட்டத்தின்போது சங்கரப்பாவும், அவரது தம்பி கணேசும், மது அருந்தி உள்ளனர். குடிபோதையில் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. 

இந்த சண்டை ஒரு கட்டத்தில் தகராறாக முற்றியுள்ளது. அப்போது கணேஷ், அங்கிருந்த மரகட்டை ஒன்றை எடுத்து சங்கரப்பாவை தாக்க முயன்றுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சங்கரப்பாவோ, வீட்டில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து கணேசை சுட்டுள்ளார்.

கணேசின் கழுத்து பகுதியில் குண்டு பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி தேன்கணிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

நாட்டு துப்பாக்கியால் கணேசனை சுட்டுக் கொன்ற அண்ணன், சங்கரப்பா, தலைமறைவாகி உள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

சங்கரப்பா உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எங்கிருந்து துப்பாக்கி கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.