Asianet News TamilAsianet News Tamil

பரபரப்பு: சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் எட்டு பேர் தீக்குளிக்க முயற்சி...

Eight people try to fire themselves at Salem Collector office
Eight people try to fire themselves at Salem Collector office
Author
First Published Jun 26, 2018, 9:25 AM IST


சேலம்
 
சேலத்தில் அரசுக்கு சொந்தமான மரங்களை சட்டவிரோதமாக வெட்டி கடத்தியும், மலையில் உள்ள செம்மண்ணை அள்ளி விற்பனை செய்தும் வருபவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகத்தில் எட்டு பேர் தீக்குளிக்க முயன்றனர்.

சேலம் மாவட்டம், நாழிக்கல்பட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி (25), ராஜ்குமார், ஆனந்த், ரகுமான், அஜித்குமார், பிரகாஷ், முத்துசாமி, திருநாவுக்கரசு ஆகிய எட்டு பேரும் நேற்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். 

அவர்கள் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் நின்றுக்கொண்டு தாங்கள் வைத்திருந்த மண்ணெண்ணெயை தங்களின் உடல்களில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். 

பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளர்கள் அவர்களை தடுத்தி  நிறுத்தி உடனடியாக அவர்களின் தலையில் தண்ணீரை ஊற்றினர்.

அதன்பின்னர் அவர்கள், "நாழிக்கல்பட்டி பகுதியில் கோட்டைகரடு மலையில் உள்ள பலவகையான மரங்கள் மற்றும் செம்மண்ணை சிலர் வெட்டி கடத்துவதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தரையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பேச்சுவார்த்தை நடத்திய காவலாளர்களை மதிக்காமல் தொடர்ந்து போராடியதால் தீக்குளிக்க முயன்ற எட்டு பேரும் கைது செய்யப்பட்டனர். 

அப்போது தீக்குளிக்க முயன்ற எட்டு பேரும், "நாழிக்கல்பட்டி காந்திநகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. நாங்கள் அனைவரும் கூலி வேலை செய்து வருகிறோம். 

எங்கள் பகுதிக்கு அருகில் கோட்டைகரடு மலை உள்ளது. இந்த மலைப்பகுதி வனத்துறையின் பாதுகாப்பிலும், தொல்லியல் ஆராய்ச்சி துறையின் கட்டுப்பாட்டிலும் இருந்து வருகிறது. மலையை சுற்றி அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலமும், மலைப்பகுதியில் வேப்பமரம், பனைமரம், புங்கை மரம் போன்ற பலவகை மரங்கள் உள்ளன.

அரசுக்கு சொந்தமான மரங்களை சிலர் சட்டவிரோதமாக வெட்டி கடத்தியும், மலையில் உள்ள செம்மண்ணை அள்ளி விற்பனை செய்தும் வருகிறார்கள். தினமும் டிப்பர் லாரிகளில் டன் கணக்கில் செம்மண் வெட்டி கடத்தப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுபற்றி சம்பந்தப்பட்ட நபர்களிடம் கேட்டால், எங்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்கள். இது குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. 

இதனால், அரசுக்கு சொந்தமான மலையில் உள்ள மரங்களையும், செம்மண்ணையும் வெட்டி கடத்தும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க முயன்றோம். 

எனவே, சட்டவிரோத செயலில் ஈடுபடும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து தீக்குளிக்க முயன்ற எட்டு பேரையும் காவலாளார்கள் வேனில் ஏற்றி நகர காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்களிடம் விசாரித்து, "இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios